’ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’..தைவான் குறித்து சீன அதிபர் எச்சரிக்கை

’ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’..தைவான் குறித்து சீன அதிபர் எச்சரிக்கை
’ராணுவத்தை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்ல முடியாது’..தைவான் குறித்து சீன அதிபர் எச்சரிக்கை

சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 5 ஆண்டுக்கு ஒருமுறை இக்கட்சியின் தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த கூட்டத்தில் முடிவில் சீன நாட்டின் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சீன நாட்டின் அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திலும் ஷி ஜின்பிங் சீன அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டம் கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பில் அரங்கில் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தை சீன அதிபரும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஷி ஜின்பிங் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 300 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின் முடிவில் சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் தொடர்ந்து 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்யூனிஸ்ட் தேசிய காங்கிரஸ் கூட்டத்தை துவங்கி வைத்து பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், “கொரோனா காலத்தில் சீனா மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மிக உயர்ந்த அளவிற்கு பாதுகாத்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க நேர்மறையான முடிவுகளை அடைந்துள்ளது. 96 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி, மனித வரலாற்றில் வறுமைக்கு எதிரான மிகப்பெரிய போரில் வெற்றி பெற்றிருக்கிறது.

ஹாங்காங்கை சீனா முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. தைவானில் பிரிவினைவாதம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை எதிர்ப்பதில் சீனா உறுதியாகவும், பெரும் போராட்டத்தையும் நடத்தி வருகிறது. தைவான் பிரச்சினையில் வெளி சக்திகளின் தலையீட்டிற்கு எதிராக "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுக்க சீனா விருப்பம் கொண்டுள்ளது. தைவான் பிரச்சினையின் தீர்வு சீன மக்களே, சீன மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம்.

மிகப்பெரிய நேர்மையுடனும், மிகுந்த முயற்சியுடனும் தைவானின் அமைதியான மறு இணைவுக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். ஆனால், படைப் பிரயோகத்தை கைவிடுவதாக நாங்கள் ஒருபோதும் உறுதியளிக்க மாட்டோம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான விருப்பத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். தைவானில் பலத்தை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று பேசினார்.

முன்னதாக சீனாவில் 2 முறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்க முடியும் என்று சட்டம் இருந்தது. ஆனால், 2017-ல் 2-வது முறையாக ஷி ஜின்பிங் அதிபராகப் பதவியேற்ற அடுத்த வருடமே, இந்த சட்டத்தை அவர் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, 3-வது முறையாக ஜி ஜின்பிங் சீனக் குடியரசின் அதிபராகப் பதவியேற்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com