''சிறு ஓட்டையை அடைக்க வெல்டிங்'' - லெபனான் வெடிவிபத்து குறித்து வெளியான தகவல்!
பெய்ரூட்டின் துறைமுகத்தில் நேற்று சக்தி வாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த நகரமும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ளன. நகரம் முழுவதும் பல்வேறு கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்தன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து உள்ளது. மிகமிக சக்தி வாய்ந்ததாக இருந்த இந்த வெடிவிபத்தால் சாலையில் நடந்து சென்ற மக்கள், தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சக்தி வாய்ந்த வெடிவிபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,700 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிவிபத்துக்கு குடோனில் வைக்கப்பட்ட 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் தான் காரணம் என லெபனான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்ட குடோனில் சிறு ஓட்டை இருந்ததாகவும் அதன் வழியாக திருட்டு நடக்கலாம் என்பதால் வெல்டிங் வைத்து அதனை அடைத்துள்ளனர். அப்போது பறந்த தீப்பொறி காரணமாக இந்த கொடூர வெடிவிபத்து ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.