ஜோ பைடன் முதல் மோடி வரை... பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டதாக இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொதுவாழ்க்கையில் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கடைப்பிடித்து வந்த ராணி எலிசபெத்தின் மறைவு தமக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 2015, 2018-ம் ஆண்டுகளில் ராணி எலிசபெத்துடனான தனது சந்திப்பு குறித்தும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
நாட்டிற்கு மிகுந்த அர்ப்பணிப்புடனும் கண்ணியத்துடனும் சேவை செய்து புகழ்பெற்ற ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தவர் மகாராணி எலிசபெத் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மகாராணி இரண்டாம் எலிசபெத், தன்னுடைய கண்ணியம், பொது வாழ்வில் நேர்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் நீண்ட காலமாக நினைவுக்கூரப்படுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எலிசபெத்தின் அன்பையும், கனிவையும் ஒருபோதும் மறவேன் என்றும் தனிப்பட்ட முறையில் தனக்கு ஊக்கமாக இருந்தவர் எனவும் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
எப்போதும் கருணையுடனும் கடமையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் திகழ்ந்தவர் மகாராணி எலிசபெத் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலம் ஆட்சி செய்த எலிசபெத்தின் சேவையை மக்கள் மறக்க மாட்டார்கள் என யுனெஸ்கோ தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இதே போல், இலங்கை, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும், ஐ.நா பொதுச்செயலாளரும் பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.