“இந்தியாவில் பருவ மழைக்காலம் நீடித்ததால் ஆஸி.யில் காட்டுத் தீ”- விஞ்ஞானி
இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிந்ததே, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்கு காரணம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ பற்றி எரிகிறது. எட்டரை லட்சம் ஹெக்டேர் பரப்பில் எரியும் தீயால் 150 வீடுகள் தீக்கிரையாகின. பல லட்சம் மரங்கள் கருகிவிட்டன. காட்டுத் தீக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட 10 ஆயிரம் கிலோ மீட்டர் தள்ளியுள்ள இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என சுற்றுச்சூழல் வல்லுநர் ட்ரென்ட் பென்மேன் தெரிவித்துள்ளார்.
ஜூனில் தொடங்கி செப்டம்பரில் முடிய வேண்டிய தென்மேற்குப் பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் வரை நீடித்ததால், ஆஸ்திரேலியாவுக்கு வரவேண்டிய குளிர்ந்த காற்று தடைபட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால், ஆஸ்திரேலியாவில் கோடை வெப்ப காலம் நீடித்ததே காட்டுத் தீ ஏற்படக் காரணம் என்றும் ட்ரென்ட் பென்மேன் கூறியுள்ளார்.
10 ஆண்டுகளில் முதல்முறையாக சிட்னி மண்டலம், ப்ளூ மவுன்டைன், மத்திய கடலோரம் ஆகிய பகுதிகளில் காட்டுத் தீ அபாய அளவை எட்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.