கால்பந்து வீரர்களை பலிகொண்ட விமான விபத்துக்கு இதுதான் காரணமா?
பிரேசில் கால்பந்து வீரர்களை பலிகொண்ட விமான விபத்துக்கான காரணம் இப்போது தெரிய வந்துள்ளது.
லத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள இரண்டாம் நிலை கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே, கோபா சுடமெரிகானா (COPA SUDAMERICANA) தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் பிரேசில், அர்ஜென்டினா, சிலி, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, ஈக்வேடார் நாடுகளில் உள்ள கிளப்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதன் பைனல் போட்டியில் பங்கேற்க, தெற்கு பிரேசிலின் சேபிகோயன்ஸ் அணி யினர் பொலிவியாவில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
லாமியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் மெட்லின், சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில், கொலம்பியா மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 71 பேரில் 65 பேர் பலியாயினர். ஆறு பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. பொலிவியா, பிரேசில், கொலம்பியாவை சேர்ந்த நிபுணர்கள் இந்த விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விமானத்தில் எரிபொருள் இல்லாததுதான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விமானம் 9,073 கிலோ எரிபொருளை வைத்திருந்ததாகவும் ஆனால் மெடிலின் சர்வதேச விமான நிலையம் வரை செல்ல இந்த எரிபொருள் போதுமானதாக இல்லை என்றும் விமா ன எரிபொருள் இருப்பு விஷயத்தில் சர்வதேச விதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.