இதுவரை 10,000 கப்பல்கள்.. பழிவாங்கும் பெரிய ஏரி.. 150 ஆண்டுகள் ஆனபிறகும் சிதையாத பாகங்கள்!
உலகைச் சுற்றி எண்ணற்ற சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்வழியே, மண்ணிலும் கடலிலும் புதைந்துபோன வரலாற்றின் தகவல்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. அந்த வகையில், வட அமெரிக்காவின் ‘கிரேட் லேக்ஸ்’ (Great Lakes) எனப்படும் ஐந்து பெரும் ஏரிகளின் அடியாழத்தில் 6,000 முதல் 10,000-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. இதுகுறித்த வியப்பான செய்தியை இங்கு அறிவோம்..
வட அமெரிக்காவில் அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்கு இடையே அமைந்துள்ள சுப்பீரியர் (Lake Superior), ஹூரான் (Lake Huron), மிச்சிகன் (Lake Michigan), ஈரி (Lake Erie), ஒன்ராறியோ (Lake Ontario) உள்ளிட்ட ஐந்து பெரும் நன்னீர் ஏரிகளின் தொகுப்பே 'கிரேட் லேக்ஸ்' என அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து ஏரிகளும் ஒன்றோடொன்று நதிகள் மற்றும் கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டு, இறுதியில் செயின்ட் லாரன்ஸ் (St. Lawrence Seaway) நதி வழியாக அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இவை உலகின் மேற்பரப்பில் உள்ள மொத்த நன்னீரில் சுமார் 21% அளவைக் கொண்டுள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பாகும். அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த சுமார் 4 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இவை முதன்மை குடிநீர் ஆதாரமாக விளங்கும் இப்பாதை, 17-ஆம் நூற்றாண்டு முதலே மிகப்பெரிய வர்த்தகப் பாதையாகத் திகழ்கிறது.
எனினும், இப்பகுதியில், மோசமான வானிலை மற்றும் கடல் அலைகளால் விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏரிகளில் வீசும் கடும் குளிர்காற்று மற்றும் 20 முதல் 30 அடி எழும்பும் உயர அலைகள் சிறிய மற்றும் பெரிய கப்பல்களை எளிதில் கவிழ்த்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஏரிகளில் மட்டும் சுமார் 6,000 முதல் 10,000 கப்பல்கள் மூழ்கிக் கிடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளிர்ந்த நன்னீர் என்பதால் இந்த மரக் கப்பல்கள் சிதையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன. மேலும், 'Thunder Bay National Marine Sanctuary' போன்ற அமைப்புகள் இவற்றுள் பல கப்பல்களைப் பாதுகாத்து வருகின்றன. இதனால், இந்த ஏரிகளின் அடிவாரம் ஒரு பிரம்மாண்டமான அருங்காட்சியகம் போல மாறியுள்ளது. மறுபுறம், சுமார் 150 ஆண்டுகளாக மறைந்துகிடந்த அக்கப்பலின் தடம் மீன் வலையில் சிக்கிய பொருளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 1872-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி இரவு, அமெரிக்காவின் மில்வாக்கியில் (Milwaukee) இருந்து மிச்சிகனுக்கு புறப்பட்ட 'லாக் லா பெல்லே' (Lac La Belle) என்ற நீராவிக் கப்பல், கொடூரப் புயலில் சிக்கி ஏரியின் நடுவே மூழ்கியது.
கப்பலில் இருந்த 53 பயணிகளில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 150 ஆண்டுகள் கழித்து, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கப்பலின் சிதைவுகளை பால் எஹோர்ன் (Paul Ehorn) என்ற புதையல் ஆய்வாளர் 2022-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தனது 15 வயதில் இருந்தே மூழ்கிய கப்பல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வரும் பால் எஹோர்ன், 1965-ஆம் ஆண்டிலிருந்தே இந்த 'லாக் லா பெல்லே' கப்பலைத் தேடி வந்தார். இந்தச் சூழலில்தான், கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு மீன்பிடி வலையில் கிடைத்த தடயத்தை வைத்து 2 மணி நேரத்திலேயே சைட்-ஸ்கேன் சோனார் (Side-scan sonar) மூலம் அந்தக் கப்பல் இருக்கும் இடம் உறுதியானது. மேலும், 217 அடி நீளம் கொண்ட இந்தக் கப்பலின் மரப் பலகைகள் மற்றும் உள்ளமைப்பு 150 ஆண்டுகள் கழித்தும் இன்னமும் சேதமடையாமல் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கெனவே இந்தக் கப்பல் நீரில் ஏற்பட்ட மோதலில் சிக்கி மூழ்கியது. பின்னர், அது மீட்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

