கோழிக்கோடு | மருத்துவ உதவி செய்வது போல் நடித்து சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவர் கைது!
சிறுமியின் ஏழ்மைநிலையைப் பயன்படுத்தி உதவுவது போல் பாலியல் தொல்லைக்கொடுத்த சம்பவம் ஒன்று கேரளாவில் அரங்கேறியுள்ளது.
கோழிக்கோட்டை அடுத்த மலப்புரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது தந்தையின் மருத்துவசெலவிற்கு 1.50 லட்சம் பணம் தேவைப்படுவதாகவும், பணத்தை மருத்துவமனையில் கட்டினால்தான் தனது தந்தையை மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்யும், ஆகவே, தனது குடும்பத்திற்கு உதவுமாறு தனது வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
சிறுமியின் நிலையைத் தெரிந்துக்கொண்ட மலப்புரத்தைச் சேர்ந்த வாகியத் கோயா என்பவர், சிறுமியை தொடர்புக்கொண்டு, தான் உதவி செய்வதாக கூறியுள்ளார். தனக்கு உதவி கிடைத்த மகிழ்ச்சியில், அச்சிறுமியும், தனது தந்தை நிலைப்பற்றியும், அவரது மருத்துவ செலவில், 1.50 லட்சம் கட்டி விட்டதாகவும், பாக்கியுள்ள 1.50 லட்சம் கட்டினால்தான் மருத்துவமனை தனது தந்தையை விடுவிப்பார்கள் எனவும், தனது குடும்பம் வறுமையில் உள்ளதால் தங்களால் 1.50 லட்சத்தை கட்டமுடியவில்லை என்று தனது குடும்ப நிலைக்குறித்து வாகியத் கோயாவிடம் கூறியுள்ளார்.
சிறுமியின் ஏழ்மை நிலமையைத் தெரிந்துக்கொண்ட வாகியத் கோயா, சிறுமியை காண மருத்துவமனை சென்று, அங்கு அவருக்கு சில மருந்துகளையும் வாங்கிக்கொடுத்து, தான் வயநாடு செல்லவேண்டியிருப்பதாகவும், வயநாடு சென்று திரும்பும் சமயம், சிறுமி தன்னுடன் அறை எடுத்து தங்கினால், மருத்துவசெலவுகள் அனைத்தையும் தானே கட்டிவிடுவதாக சிறுமியிடம் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது திகைத்து இருக்கிறார். இந்நிலையில், தொடர்ந்து சிறுமிக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார் வாகியத் கோயா.
ஒரு கட்டத்தில் தனது பேச்சை கேட்க மறுத்த சிறுமிக்கு, உதவி செய்வதை நிறுத்தியதுடன் அவரை தொடர்ந்து மிரட்டியுள்ளார் வாகியத் கோயா. இதை அடுத்து அந்த சிறுமி மிகவும் தைரியத்துடன் வாகியத் கோயா அனுப்பிய ஆபாச செய்திகள் உட்பட அனைத்தையும், போலிசாரிடம் ஆதாரமாக காட்டி வாகியத் கோயாவிற்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து வாகியத் கோயாவை போலிசார் கைது செய்துள்ளனர் .
இதற்கிடையில், சமூக ஆர்வலர் நௌஷாத் தேக்கா என்பவர் சிறுமிக்கு தேவையான பணத்தை திரட்டி மருத்துவமனையில் கட்டியதுடன் , சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தங்கிக்கொள்ள ஒரு புதிய வாடகை வீட்டையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.