'கொரோனா வந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை' கிம் ஜாங் உன்
வட கொரியாவில் கொரோனா வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு உயரதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாட்டுக்குள் வந்துவிட்டது என தெரியவந்தால் அதிகாரிகள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனா வருவதற்கு வாய்ப்புள்ள துறைமுகங்கள், விமான நிலையங்களை மூடுமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் கொடூரமாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது . சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது. கொரோனா வைரஸால் சீன மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன. சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. சீனாவிலிருந்து முன்னதாக வந்த இந்தியர்கள் பலரையும் தீவிர சிகிச்சையில் இந்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.