ரஷ்ய விமானங்களுக்கு வான்வழி மூடல்.. கெத்து காட்டிய கிம் ஜாங் உன்.. அதிர்ச்சியில் புதின்!
செய்தியாளர் - M.மீரா
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு மிக நெருங்கிய நட்பு நாடாகவும், தூணாகவும் விளங்கி வந்த வடகொரியா, தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. ரஷ்யாவுடனான ராணுவ உறவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானங்களுக்குத் தங்களது வான்வழியைப் பயன்படுத்தத் தடை விதிப்பதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை (HUR) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ வெளியிட்ட ஒரு கருத்துதான் இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. தென்கொரியா மற்றும் வடகொரியா இடையேயான எல்லையோரப் பதற்றத்தைத் தணிக்கவும், இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தவும் ரஷ்யா உதவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
தங்களின் பரம எதிரியான தென்கொரியா விவகாரத்தில், தங்களுக்கு முழு ஆதரவு தராமல் ரஷ்யா நடுநிலை வகிக்க முயல்வது கிம் ஜாங் உன்னை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பரஸ்பர ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிவிட்டதாக வடகொரியா கருதுகிறது.
இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, ரஷ்யாவுக்கு வழங்கி வந்த மூன்று முக்கிய ராணுவ உதவிகளை வடகொரியா உடனடியாக முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவதாக, ரஷ்யாவின் ராணுவ சரக்கு விமானங்கள் வடகொரிய வான் எல்லைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பியொங்யாங் (Pyongyang) விமான நிலையத்தில் ரஷ்ய விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பெரும் பலமாக இருந்த KN-23 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் விநியோகத்தை வடகொரியா முழுமையாக நிறுத்தியுள்ளது.
மூன்றாவதாக, உக்ரைன் போர்க்களத்திற்கு அனுப்ப ரஷ்யா கோரியிருந்த 50,000 கூடுதல் வடகொரிய வீரர்களை அனுப்பும் திட்டத்தையும் கிம் ஜாங் உன் தற்போது நிறுத்தி வைத்துள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யா ஏற்கனவே கடுமையான ஆயுதப் பற்றாக்குறையையும், மனிதவளப் பற்றாக்குறையையும் சந்தித்து வரும் வேளையில், வடகொரியாவின் இந்த திடீர் பல்டி புதினுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரானுக்கு வடகொரியா உதவி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் சேதமடைந்த ஏவுகணை ஏவுதளங்களை மீண்டும் கட்டமைக்க வடகொரிய நிபுணர்கள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாக இஸ்ரேலிய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. போரின்போது ஈரான் தனது ஏவுகணை ஏவுதளங்களில் பெரும்பகுதியை இழந்ததாகவும், தற்போது அவற்றை மீண்டும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவுகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவது சர்வதேச அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

