ஹவாயில் வெடித்துச் சிதறிய எரிமலை: நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
ஹவாய் தீவில் எரிமலை வெடித்து நெருப்புக் குழம்புகள் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அங்கு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஹவாய் தீவில் அண்மை காலமாக சீறிவந்த கிளாவுவா எரிமலை வெடித்துச் சிதறுகிறது. இதனால் அதில் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளியேறி வருகின்றன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எரிமலை குழம்பு 150 அடி உயரத்துக்கு பீறிட்டு, 183 மீட்டர் சுற்றளவுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. எரிமலைக்குழம்பு காட்டுக்கும் பரவியதால் அங்குள்ள மரங்கள் எரிந்து வருகின்றன. எரிமலை சீற்றம் காரணமாக அங்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
எரிமலை சீற்றம் காரணமாக கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஹவாலி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால், மேலும், ஒரு இடத்தில் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.