91ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர்கள் இன்றி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாலிவுட் சினிமாவின் முக்கிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது விழா. இதில் விருது பெறுவது ஹாலிவுட் நடிகர்களுக்கு பெரிய கவுரவம். தமிழரான ஏ.ஆர்.ரகுமான்,‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என இந்த விருது 24 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.
உலகமே உற்று நோக்கும் இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் யாரெல்லாம் விருது வாங்குகிறார்கள் என்பதை போல நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்? எப்படி தொகுத்து வழங்குகிறார்கள் என்பதும் கவனம்பெறும். வரும் பிப்ரவரி 24ஆம் தேதி 91 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நடைபெற உள்ளது. அதில் பிரபல நடிகர் கெவின் ஹார்ட் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தன்பாலின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் தான் ஆஸ்கர் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்துள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு இன்னும் 6 வாரங்களே இருக்கும் நிலையில், தொகுப்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தொகுப்பாளர் இன்றி நிகழ்ச்சியை நடத்த அகாடமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.