சவுதியில் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய முதல் இந்திய பெண்!
சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் பெற்றுள்ளார்.
சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும் விளையாட்டு போட்டி களை பெண்கள் நேரில் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபிய பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் வாங்கிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை சரம்மா என்ற நர்ஸ் பெற்றுள்ளார். இவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர். இவரது கணவர் மாத்யூ தாமஸ். சவுதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார்.
இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அவர், சவுதியில் அந்த உரிமம் பெற விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கார் ஓட்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில் தேர்வானதை அடுத்து, அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.