6 நாடுகள்.. 8,640 கி.மீ தூரம்.. 370 நாட்கள்! கேரளாவிலிருந்து மக்காவுக்கு நடந்தே சென்ற இளைஞர்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியைச் சேர்ந்தவர், ஷிஹாப் சோத்தூர். இவர், உலகிலேயே இஸ்லாமியர்களின் மிக புனித ஸ்தலமான சவூதி அரேபியாவில் உள்ள மக்காவை அடைவதற்கு கால்நடையாகவே தன் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி தொடங்கிய அவரது பயணம் தற்போது நிறைவுபெற்றுள்ளது. ஷிஹாப், தன்னுடைய நடைப்பயணத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து, இறுதியில் சவூதி அரேபியாவை அடைந்துள்ளார்.
கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் குவைத்தில் இருந்து சவூதி அரேபிய எல்லைக்குள் நுழைந்த அவர், அதன்பிறகு இஸ்லாமிய புனிதத் தலமான மதீனாவுக்கும் சென்றார். அவர் மக்காவிற்குச் செல்வதற்கு முன் 21 நாட்கள் மதீனாவில் தங்கி இருந்தார். மதீனாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான 440 கி.மீ தூரத்தை ஷிஹாப் 9 நாட்களில் கடந்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் ஷிஹாப், தன்னுடைய பயணம் குறித்த வீடியோ பதிவுகளை அதில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கேரளாவிலிருந்து மக்காவிற்கு நடைப்பயணம் மேற்கொண்ட வீடியோவையும் அதில் வெளியிட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.
இந்திய மாநில எல்லைகளைக் கடந்து, இறுதியாக வாகா எல்லைக்குள் நுழைந்தபோது, விசா இல்லாததால் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், அந்த போக்குவரத்து விசாவைப் பெறுவதற்காக வாகாவில் உள்ள ஒரு பள்ளியில் பல மாதங்கள் காத்திருந்துள்ளார்.
இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம், ஷிஹாப் ட்ரான்ஸிட் விசாவைப் பெற்று பாகிஸ்தானுக்குள் நுழைந்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு ஈரான், ஈராக், குவைத் நாடுகள் வழியாக தற்போது மக்காவை அடைந்துள்ளார்.
மக்காவுக்கு நடந்தே செல்ல வேண்டும் என்பது ஷிஹாப்பின் சிறு வயது கனவு என்றும், இதற்காக நாள் ஒன்றுக்கு 25 கி.மீ. அவர் நடந்தே சென்றதாகவும் கூறப்படுகிறது. 8,640 கி.மீ தூரம் பயணத்தைக் கடக்க, அவர் 370 நாட்கள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் மக்காவுக்கு நடந்தே சென்ற சாதனைப் பட்டியலிலும் ஷிஹாப் இடம்பிடித்துள்ளார்.