கென்யாவின் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, அதன் முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில், எதிர்க்கட்சி வெற்றி பெற்றதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கென்யாவில் நடந்து முடிந்திருக்கும் அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பாக குழப்பம் நீடித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளரான ஓடிங்காவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ஓடிங்கா வெற்றி பெற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் எதையும் அறிவிக்கவில்லை. சர்வதேசப் பார்வையாளர்கள் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி, தற்போதைய அதிபரான உகுரு கென்யாட்டா 54 சதவிகித வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

