காஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தானிற்கு சீனாவும்; இந்தியாவிற்கு ரஷ்யாவும் ஆதரவு
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் சீனாவும், எல்லை பிரச்னையில் இந்தியா ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை மீற கூடாது என எச்சரிக்கை விடுத்தது.
அத்துடன் பாகிஸ்தான் இந்த விவகாரம் தொடர்பாக ஐநாவிடம் முறையிட்டது. அதேசமயம் ஐநாவின் நிரந்தர உறுப்பினரான சீனா, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் மூடப்பட்ட அறையில் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை வைத்தது. இதனை ஏற்ற பாதுகாப்பு கவுன்சில், இன்று ஒரு மூடப்பட்ட அறைக்குள் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் இம்மாத தலைவரான போலாந்தின் ஜோன்னா ரொனெக்கா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானிற்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா மற்றும் சீனா தீர்வு காண வேண்டும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி பாலியான்ஸ்கி இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் ஐநா தலையிடக்கூடாது எனவும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.