கச்சா எண்ணெய் விவகாரம் | 'Mind your own business' டிரம்பிற்கு எம்.பி கமல்ஹாசன் கடிதம்.!
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் அரசு மூடியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதிலும் எரிசக்தி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான் சமீபத்தில், இந்தியா 30 நாட்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது எனவும் இது இடைக்கால அனுமதி தான் எனவும் அமெரிக்கா தெரிவித்தது இந்திய அளவில் பேசுபொருளாகியிருந்தது. இதையடுத்து, அமெரிக்கா இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது என்ற வாதத்துடன் டிரம்பின் நிர்வாகத் திறன் குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தளப் பதிவில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா 30 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது. தனது நாட்டு மக்களின் எரிசக்தி தேவைக்கு மற்றொரு நாட்டின் அனுமதியை இந்தியா ஏன் பெற வேண்டும்?. இந்தியாவின் நீண்டகால மரபான 'சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை' மற்றும் 'மூலோபாய தன்னாட்சி' ஆகியவற்றில் மத்திய பாஜக அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது” எனவும் தெரித்திருந்தார்.
அமெரிக்க கச்சா எண்ணெய் வாங்க 30 நாட்கள் அனுமதி கொடுத்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்திருந்த மத்திய அரசு, போட்டித்தன்மை வாய்ந்த விலைகளை வழங்கும் எந்தவொரு இடத்தில் இருந்தும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதாகவும் எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் எந்தவொரு நாட்டின் அனுமதியும் எங்களுக்கு தேவையில்லை எனத் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் தான், எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து எம். பி கமல்ஹாசன் அமெரிக்க அதிர்பர் டிரம்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இந்திய மக்களாகிய நாங்கள் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். தூரத்தில் உள்ள வெளிநாடுகளிடமிருந்து இனி எங்களுக்கு உத்தரவுகள் வரும் நிலை இல்லை. உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உள்ள உங்களுடைய பணிகளை மட்டுமே கவனிக்கவும். இறையாண்மை கொண்ட நாடுகளுக்கிடையேயான பரஸ்பர மரியாதை மட்டுமே நிலையான உலக அமைதிக்கான அடித்தளமாகும். உங்கள் நாடும் அதன் மக்களும் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ எங்கள் நல்வாழ்த்துகள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

