\
Kalema flags used by IS AlQaida appear in Bangladesh amid FIFA WC
bangladeshx page

மகிழ்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்.. கையில் அல்கொய்தா கொடிகள்.. சர்ச்சையில் சிக்கிய வங்கதேசம்!

வங்கதேசத்தில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டுக் கொடிகளை வீடுகளின் கூரைகளிலும், தெருக்களிலும் கட்டிவைத்துக் கொண்டாடுவது வழக்கம்.
Published on

கால்பந்து உலகக்கோப்பை களைகட்டி வரும் நிலையில், ரசிகர்களின் கைகளில் தீவிரவாதக் கொடிகள் இருப்பது வங்கதேசத்தை அதிரவைத்துள்ளது.

கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர், ஜூன் 11ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. ஃபிஃபா உலகக் கோப்பை கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வங்கதேசத்தில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா அமைப்புகளின் கொடிகளைச் சார்ந்த 'கலேமா' கொடிகள் தோன்றியிருப்பது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள அணிகளை, அந்தந்த நாட்டு ரசிகர்கள் தங்களது கொடிகளுடன் உற்சாகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் வங்கதேசத்தில் உள்ள ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாட்டுக் கொடிகளை வீடுகளின் கூரைகளிலும், தெருக்களிலும் கட்டிவைத்துக் கொண்டாடுவது வழக்கம்.

இந்தச் சூழலில், இஸ்லாமிய மத வாசகங்கள் அடங்கிய கருப்பு மற்றும் வெள்ளை நிற ‘கலேமா’ (Kalema) கொடிகள் வங்கதேசத்தின் பல பகுதிகளில் திடீரென தோன்றியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலிபான், ஐ.எஸ், அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இத்தகைய கொடிகள் தொடர்புபடுத்தப்படுவதால், இது வங்காளதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, ஜூன் 17ஆம் தேதி வங்கதேசத் தலைநகர் டாக்காவின் மேம்பாலம் ஒன்றில், இந்த அரபு மொழி வாசகங்கள் அடங்கிய கொடிகள் முதன்முதலில் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து டாக்கா (மிர்பூர்), சிட்டகாங், காக்ஸ் பஜார் மற்றும் ஃபரித்பூர் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களிலும் இக்கொடிகள் கட்டிவைக்கப்பட்டுள்ளன. மேலும், மோட்டார் சைக்கிள் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளில் இளைஞர்கள் இக்கொடிகளை ஏந்திச் செல்லும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வங்கதேசத்தில் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல் மற்றும் செல்வாக்கு அதிகரித்து வருகிறதோ என்ற அச்சத்தை இது அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரங்களிலும், அண்டை நாடான இந்தியாவிலும் ஏற்படுத்தியுள்ளது.

எனினும், கால்பந்து உலகக் கோப்பை மீதான மக்களின் அளவுக்கு மீறிய மோகத்திற்கு எதிராகவும், உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த பேரணிகள் நடத்தப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, இந்தக் கொடிகளை தீவிரவாதத்தின் அடையாளமாகப் பார்த்தால், முதலில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் கொடிகளையும் கீழே இறக்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகின்றனர். அதேநேரத்தில், வங்கதேசத்தில் இவ்விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பாதுகாப்பு முகமைகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com