அப்போது செய்தி வாசிப்பாளர், இப்போது சாலையில் உணவு விற்பவர் - தலிபான்களால் நேர்ந்த கொடுமை
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, அந்த நாடு மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் பல ஊடகவியலாளர்கள், குறிப்பாகப் பெண்கள் வேலையிழந்துள்ள நிலையில், ஊடகங்கள் மீதும் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் சொந்த நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என எண்ணத்துக்கு ஆப்கானியர்களே தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தலிபான்களின் சர்வாதிகாரத்தால் எத்தனை திறமையான வல்லுநர்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது ஹமீத் கர்சாய் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிய கபீர் ஹக்மால் என்பவரின் ட்விட்டர் பதிவு மூலம் அறிய முடிகிறது.
அதன்படி, முஸா முகம்மாதி என்ற ஆப்கன் ஊடகவியலாளரின் படங்களை ஹக்மால் பகிரிந்திருக்கிறார். அதில், தலிபான்களின் ஆட்சிக்கு முன்பு வரை ஆப்கானிஸ்தானின் முன்னணி செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பல செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் முஸா முகம்மாதி.
அப்படியான திறமையான ஒருவர்தான் தற்போது தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு சாலைகளில் உணவு விற்று குடும்பத்தை காப்பாற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலையில் உணவு விற்கும் முகம்மாதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியதில் ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் அஹ்மதுல்லா வாசிக், “முன்னாள் செய்தியாளரும், செய்தி வாசிப்பாளருமான முகம்மாதியை எங்கள் நிறுவனத்தில் பணியமர்த்துகிறோம். எங்களுக்கு அனைத்து ஆப்கானிய நிருபர்களும் தேவை” என ட்விட்டரில் குறிப்பிட்டு உறுதியளித்துள்ளார்.
ALSO READ: