ஹவுதி தாக்குதல் தொடர்பான அமெரிக்க ராணுவ குழுவில் தவறுதலாக சேர்க்கப்பட்ட பத்திரிக்கையாளர்!
ஹவுதி தாக்குதல் தொடர்பான முக்கிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும் அமெரிக்க அரசின் உயர்மட்ட குழு ஒன்றில், தி அட்லாண்டிக் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் இணைக்கப்பட்டார். தற்செயலாக நடந்தாக கூறப்படும் இந்த சம்பவம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெஃப்ரி கோல்ட்பெர்க்கின் தி அட்லாண்டிக் இதழில் வெளியான கட்டுரையில் அமெரிக்க அதிகாரிகளின் உரையாடல்கள் வெளியானது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ் பேசியிருப்பதும் அடங்கும்.
சிக்னல் எனப்படும் மெசஞ்சர் அம்சம் கொண்ட செயலியில் 'Houthis PC small group' என்று பெயரிடப்பட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் 19 உறுப்பினர்கள் இருந்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் குரூப்பின் அட்மினாக இருந்தார். Chat கசிவுக்கு முழுப் பொறுப்பையும் வால்ட்ஸ் ஏற்றுக்கொண்டார். மேலும் சமீபத்தில் ஃபாக்ஸ் நியூஸுடனான உரையாடலில் இந்த சம்பவத்தை "சங்கடமானது" என்று குறிப்பிட்டார்.
வெளியிடப்பட்ட தகவலின்படி மார்ச் 15 அன்று இந்திய நேரப்படி இரவு 9.14 மணிக்கு chats தொடங்கப்பட்டுள்ளது. ஏமன் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தொடர்ந்து குரூப்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதே நேரத்தில் இவர் ட்ரம்பின் உயர் அதிகாரிகளால் மறைமுகமாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த குழுவில் தேசிய புலனாய்வு இயக்குநர் துல்ஸி காபார்ட், CIA இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் உட்பட முக்கிய அதிகாரிகளும் இருந்துள்ளனர்.
The Atlantic இதழில் சாட்கள் வெளியானதால் அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. அதிபர் டிரம்ப் தரப்பு இந்த தகவலை மறுத்து இருக்கிறது. எனினும் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து விளக்கம் அளித்த ட்ரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடம் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர் ஒருவர்தான், ஜெஃப்ரி போல்ட்பர்க்கை தவறுதலாக குழுவில் சேர்த்திருக்கலாம் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அந்த குழுவில் எந்த முக்கிய பாதுகாக்கப்பட்ட தகவலும் இல்லை என்றும், குறிப்பிட்ட நபரை சேர்த்ததால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.