\
Johnson & Johnson
Johnson & Johnson web

ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்? ₹52,800 கோடி இழப்பீடு தர நிறுவனம் ஒப்புதல்!

டால்கம் பவுடர் வழக்குகளில் நீண்டகால சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜான்சன் & ஜான்சன் 5.5 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது.
Published on
Summary

அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன், தங்கள் டால்கம் பவுடர் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் மற்றும் மீசோதெலியோமா ஏற்பட்டதாகக் கூறப்படும் சுமார் 76,000 வழக்குகளுக்கு தீர்வு காண 5.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ₹52,800 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்தாலும், நீண்டகால சட்டப் போராட்டத்தை முடிக்க இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.

செய்தியாளர்; M. மீரா

அமெரிக்காவின் முன்னணி மருந்து மற்றும் சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson), டால்கம் பவுடர் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காண 5.5 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இச்செய்தியை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Johnson & Johnson
Johnson & Johnson web

நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், பல ஆண்டுகளாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த முடிவின் நோக்கம் என தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம், டால்கம் பவுடர் தொடர்பாக நிலுவையில் உள்ள சுமார் 76,000 வழக்குகளை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.

எனினும், தனது டால்கம் பவுடர் அடிப்படையிலான தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் மறுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும், நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுவனம் நிறுத்தியுள்ளது.

johnson & Johnson
johnson & Johnsonweb

இதற்கு முன்பும், டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் தடயங்கள் இருந்ததாகக் கூறப்பட்ட பல வழக்குகளை ஜான்சன் & ஜான்சன் சமரசம் மூலம் முடித்துள்ளது. தற்போது, 2025-இல் தாக்கல் செய்யப்பட்ட இதேபோன்ற வழக்குகள் தொடர்பாக இங்கிலாந்திலும் நிறுவனம் சட்டச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அங்கு சுமார் 3,000 பேரின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில், 1 பில்லியன் பவுண்டுகளுக்கும் (1.3 பில்லியன் டாலர்) அதிகமான இழப்பீடு கோரப்பட்டுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை பயன்படுத்திய பிறகு தமக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ கருப்பை புற்றுநோய் அல்லது மீசோதெலியோமா போன்ற நோய்கள் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்குகள் அதன் தயாரிப்புகளின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com