அமெரிக்கா: ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் அனுமதி!
ரத்தம் கட்டுதல் புகார்களை அடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. மற்ற மருந்துகளைப் போல அல்லாமல் இந்த தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் எடுத்து கொண்டால் போதும். 80 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 15 பேருக்கு ரத்தம் கட்டுதல் பிரச்னை வந்தது. அதில் மூவர் உயிரிழந்தனர்.
எனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அமெரிக்கா தற்காலிக தடை விதித்தது. தற்போது தரவுகளை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் அந்த தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 50 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கே ரத்தம் கட்டுதல் பிரச்னை ஏற்படுவதால் , அவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்துவதில் கவனம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.