`150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம்’- கருக்கலைப்பு சட்டம் ரத்து பற்றி பைடன் வருத்தம்
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டு கால உத்தரவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், கருக்கலைப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாகாணங்களே கட்டுப்படுத்தலாம் என்றுகூறி, இனி அங்கு கருக்கலைப்பு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், சரியாக 1973-ம் ஆண்டு Roe v. Wade என்பவரது ஆட்சிக்காலத்தின்போது `கருக்கலைப்பு பெண்களின் அடிப்படை சட்ட உரிமை’ எனக்கூறி அமெரிக்காவில் கருக்கலைப்பு தேசியமாக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தலைகீழாக தற்போது, `முன்பு தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கருக்கலைப்பு உரிமை, தற்போது ரத்தாகிறது. இனி கருக்கலைப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாகாணங்களே கட்டுப்படுத்தலாம்’ என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கருக்கலைப்பு சட்டத்தை வரம்புக்குள் உட்படுத்தவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கருத்துகள் வெளியாகி வருகின்றன.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் மகளிர் அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் கருத்துகளை பகிர்ந்துள்ளார் தற்போது அமெரிக்க அதிபர் பைடன். அவர் கூறியுள்ள கருத்தில், `அவர்கள் சட்டத்தை வரம்புக்குள் கொண்டு வர முயலவில்லை. வெளிப்படையாகவே உரிமையை பறித்துள்ளனர். இதன்மூலம் பல அமெரிக்கர்களுக்கு மிகவும் அடிப்படையான ஒரு அரசியலமைப்பு உரிமையை, மிகவும் வெளிப்படையாக நீதிமன்றம் பறித்துள்ளது. இந்த தீர்ப்பின் வழியாக நீதிமன்றம் இதுவரை தான் செய்யாத ஒரு செயலை இப்போது செய்திருக்கிறது. என் பார்வையில், இந்த தீர்ப்பு ஒரு தீவிர சித்தாந்தத்தின் வெளிப்பாடுதான். இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு சோகமான பிழையை செய்திருக்கிறதென்றே நான் கருதுகிறேன். கிட்டத்தட்ட 150 வருடங்கள் அமெரிக்காவை இந்த தீர்ப்பு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.
இந்த தீர்ப்பு என்னை திகைக்க வைக்கிறது. அமெரிக்காவுக்கு இது சோகமான தினம். 50 ஆண்டுகளுக்கு முன் வந்த தீர்ப்புக்கு நேரெதிராக வந்துள்ள இந்த தீர்ப்பினால் அமெரிக்க பெண்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கும், நீதிமன்றத்துக்கும் இது சோகமான நாள். கிட்டத்தட்ட 150 வருடங்கள் அமெரிக்காவை இந்த தீர்ப்பு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது. இந்த தீர்ப்பு வகுக்கும் பாதை, மிகவும் ஆபத்தானது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கருத்தரித்தலுக்கான அடிப்படை உரிமைகளை கோரி இந்த அரசு போராடும்.
கருக்கலைப்பு தொடர்பான முயற்சியில், எந்த மாகாணத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும், அவர்களை பாதுகாக்க இந்த அரசு எப்போதும் இருக்கும் என உறுதியளிக்கிறேன். இதுபோன்ற எந்தவொரு தீர்ப்பும், ஒரு பெண்ணின் தேர்வு உரிமைக்கு உத்தரவாதம் அளிக்காது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து போராடுவோரை, `அமைதியான முறையில் போராடுங்கள்’ எனக்கூறி போராட்டத்துக்கும் அனுமதி அளித்திருக்கிறார் பைடன்.
இந்த கருக்கலைப்பு தீர்ப்பு கருத்தடை சாதனங்களின் உபயோகிப்பு மற்றும் ஓரினச்சேர்க்கை திருமண உரிமைகளை குறைக்கக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.