ஜில் பைடனுக்கு மதிப்பு வாய்ந்த பரிசளித்தவர்களில் இந்திய பிரதமர் மோடிக்கு முதலிடம்!
வெளிநாட்டு தலைவர்கள் மூலம், 2023-ம் ஆண்டில் மட்டும் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள பரிசுகளை அமெரிக்க அதிபரும் அவரது குடும்பத்தினரும் பெற்றிருப்பதாக, அமெரிக்க அரசின் வருடாந்திர அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக ‘அமெரிக்க அரசின் முதல் குடிமகள்’ என கருத்தப்படும் ஜில் பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து 20,000 டாலர் மதிப்பிலான (இந்திய மதிப்பில் 16 லட்சம் ரூபாய்) வைரத்தை பரிசாக பெற்றிருப்பதாக அமெரிக்க வருடாந்திர அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் பரிசுக்கு அடுத்தபடியாக, 14,063 டாலர் மதிப்பிலான brooch என்ற அணிகலனை உக்ரைனின் பரிசாகவும், 4,510 டாலர் மதிப்பிலான பிரேஸ்லெட், brooch மற்றும் புகைப்பட ஆல்பத்தை எகிப்தின் பரிசாகவும் பெற்றிருக்கிறார் ஜில் பைடன். இதில் உக்ரைனின் பரிசு, உக்ரைன் தூதரிடம் இருந்தும், எகிப்தின் பரிசு எகிப்தின் முதல் பெண்மணியும் அந்நாட்டு அதிபருமான Entissar Amer-விடம் இருந்தும் பெற்றுள்ளார்.
இதேபோல அமெரிக்க அதிபரும் எண்ணற்ற பரிசுகளை பெற்றுள்ளார். அதில் தென் கொரியாவின் 7,100 டாலர் மதிப்பிலான நினைவு புகைப்பட ஆல்பம், மங்கோலிய பிரதமரிடம் இருந்து 3,495 டாலர் மதிப்பிலான மங்கோலிய போராட்டக்காரர்களின் சிலை, இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து 3,160 டாலர் மதிப்பிலான சில்வர் ட்ரே என பல அடங்கும்.
‘அமெரிக்காவின் முதல் குடிமகள்’ ஜில் பைடனுக்கு இந்திய பிரதமர் மோடி கொடுத்த 20,000 டாலர் மதிப்பிலான வைரமானது, தனிப்பட்ட முறையில் தரப்பட்டாலும், அதை வெள்ளி மாளிகையின் கிழக்கு வளாகம் தங்கள் அலுவலகத்தில் வைத்து அழகுபார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற பரிசுகள் யாவும் பைடன் மற்றும் ஜில் பைடனுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின்படி, பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர், எகிப்து அதிபரின் மனைவி ஆகியோர் மதிப்பு வாய்ந்த பரிசுகளை வழங்கியுள்ளனர். அமெரிக்க சட்டப்படி அதிபர் மாளிகையில் உள்ளவர்கள், தங்களுக்கு கிடைத்த பரிசுகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், கடந்த ஜூலை 7, 2023 அன்று இந்தியாவில் அமராவதியை சேர்ந்த அஜய் பாசுதேவ் போஸ் என்பவர், பிரதமர் மோடி கொடுத்த பரிசை குறிப்பிட்டு ‘இந்த பரிசின் விலை என்ன? முழு விவரம் தரவும்’ என ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ஜூலை 13, 2023-ல் பதிலளித்த நம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “நீங்கள் கேட்ட தகவல்களை வெளியிடுவது, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு அரசுடனான இந்தியாவின் உறவுகளை பாதிக்கலாம். ஆகவே RTI சட்டம்-2005 இன் பிரிவு 8(1)(a) இன் கீழ் இந்த கேள்விக்கு விலக்கு அளிக்கப்பட்டு, பதில் மறுக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தது. இந்த பதில், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.