ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் பிழைத்த ‘பேபி ஜெஸிகா’ - அமெரிக்கா படித்த பாடம்.
”நீரை பூமியில் தேடக்கூடாது வானத்தில் இருந்து பெற வேண்டும்” என்று சொன்னார் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். எப்போது நாம் நீர் மேலாண்மையில் கோட்டை விட்டோமோ, எப்போது நாம் தண்ணீரை பூமிக்கடியில் தேடத் துவங்கினோமோ அப்போதே மனித குல அழிவும் துவங்கிவிட்டது. நாம் கற்கத் தவறிய முதல் பாடம் அது. என்றாலும் கால ஓட்டத்தில் நிகழும் மாற்றத்தின் காரணமாக நமக்கு ஆழ்த்துளைக் கிணறுகள் தேவைப்படுகிறது. நாம் அதிலும் உரிய கவனத்தோடு இல்லாமல் செயல்படுவது வேதனை.
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ஆழ்துளைக் கிணறு விபத்துகள் நடந்த வண்ணம் தான் உள்ளன. ஆனால் பல தேசங்கள் தங்கள் தவறிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு விட்டன. நாம் இப்படியான துயரங்களை அடிக்கடி செய்தியாக கடந்து கொண்டிருக்கிறோம்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ளது மிட்லேண்ட் நகரம். அங்கு 1987 ஆம் ஆண்டு ஜெஸிகா மெக்லியூர் என்ற ஒன்றரை வயது குழந்தை தன் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. தாயின் கண்காணிப்பில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென வீட்டின் பின்னால் இருந்த மூடப்படாத 22 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.
பதறிப்போன தாய் மீட்புக்குழுவிற்கு தகவல் சொல்ல, விரைந்து வந்தது தீயணைப்புத் துறை வாகனங்களும், மீட்புப் படையும். எளிமையாக மீட்டுவிடலாம் என நினைத்த மீட்புப்படைக்கு நம் ஊரைப் போலவே அங்கிருந்த பாறைகள் சவாலாக இருந்தது. அப்போது அமெரிக்காவில் அறிமுகமாகியிருந்த வாட்டர் ஜெட் கட்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பக்கவாட்டில் துளையிட்டு மீட்புக்குழு வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார். கிட்டத்தட்ட 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜெஸிகா மெக்லியூர் உயிருடன் மீட்கப்பட்டாள். நாடே அதனைக் கொண்டாடியது. தன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜெஸிகாவிற்கு இப்போது வயது 33.
ஜெஸிகாவை மீட்ட கையோடு நாட்டில் கவனிப்பின்றி கிடந்த அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் போர்க்கால அடிப்படையில் மூடியது அமெரிக்க அரசு. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அமெரிக்காவில் ., ஜெஸிகாவிற்கு பிறகு இன்று வரை ஒரு ஆழ்துளைக் கிணறு விபத்து கூட நிகழவில்லை...
சுஜித்தின் மரணத்திற்கு பிறகாவது விழிக்குமா இந்தியா…?
வீடியோ :