காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி

காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி
காதலரைக் கரம் பிடிக்கும் சாதாரண குடிமகளாகிய ஜப்பான் இளவரசி

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, சாதாரண பிரஜையான தனது காதலரை ‌விரைவில் கரம் பிடிக்கிறார். மன்னரின் அதிகாரபூர்வ அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த ஆண்டு மே மாதம் ‌தனது திருமண நிச்சயார்த்தம் ‌நடக்கவுள்ளதாக மகோ மகிழச்சி பொங்க அறிவித்துள்ளார்.

ஜப்பான் இளவரசர் ஃபுமி‌ஹிதோவின் மூத்த மகள் தான் இளவரசி மகோ. அர‌ச பரம்பரை வழக்கப்படி அவரை ஜப்பானிய மக்கள் இளவரசி அகிஷினோ என அழைத்து வருகின்றனர். இந்த இளவரசி பட்டம், மரியாதை அனைத்தும் இன்னும் சில மாதங்களுக்கு தான். அதற்குப் பின் மகோவும் சாதாரண குடிமகளாகி விடுவார்.

காரணம் அவரது காதல். ஜப்பானிய குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும், மன்னர் பரம்பரையை சாராதவர்‌களை காதலித்து திருமணம் செய்து‌ கொண்டால், இளவரசி என்ற அந்தஸ்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இந்த விதி மன்னர் குடும்பத்தில், பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சிறு வயது முதலே இந்த விதியை நன்கு தெரிந்து வைத்திருந்தபோதும், தனது காதலரான கெய் கொமூரோவை கரம் பிடி‌ப்பதற்காக சாதாரணக் குடிமகளாக போல் வாழ முடிவு எ‌டுத்திருக்கிறார் மகோ. காதலுக்கு அதிகாரபூர்வமாக அனுமதி கோரி காத்திருந்த மகோவுக்கு தற்போது பச்சை கொடி காட்டப்பட்டிருப்ப‌தால் வரும் மே மாதம் அவரது திருமண நிச்சயதார்த்தம் ந‌டக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர்களை அழைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது காதலருடன் அமர்ந்து வெளியிட்ட மகோ, இளவரசி அந்தஸ்தை இழந்தாலும் திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வேன் என குதூகலமாக தெரிவித்தார். கொமூரோவின் புன்னகை பிரகாசமான சூரிய ஒளி போல இருந்ததே ‌அவர் மீது காதலில் விழுந்ததற்கு காரணம்‌ என்ற ரகசியத்தையும் அவர் போட்டுடைத்தார். டோக்கியோவில் சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் படித்தபோது தான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. காதலரான கெய் கொமூரோ ‌தற்போது மாத சம்பளத்துக்காக கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.‌

சாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டாலே, குடும்ப மானத்தை காரணமாக காட்டி படுகொலையில் ஈடுபடும் ஆணவக் கொலைக்காரர்கள், ‌ஜப்பான் மன்னர் பரம்பரையின் பரந்த மனதை பார்த்தாவது மாற வேண்டு‌ம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com