சென்னையில் ஜப்பான் 2017 திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ளது.
அகிரா குரோசாவா போன்ற மிகப்பெரிய சினிமா ஆளுமை பிறந்த பூமி ஜப்பான். உலக அளவில் ஜப்பானிய சினிமா கலைஞர்களுக்கு அதிக மதிப்புள்ளது. இந்தியாவிலுள்ள பல திரைக் கலைஞர்கள் ஜப்பானிய திரைப்படங்களை மாதிரியாக கொண்டு இயங்கியுள்ளனர். ஜப்பானியருக்கும் தமிழர்களுக்குமாக உறவு ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
ரஜினியின் முத்து திரைப்படத்திற்கு ஜப்பானில் ரசிகர்கள் அதிகம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பல பாடல்களை ஜப்பானியர்கள் பாடி பரவசப்படுவதை போன்ற பல வீடியோ பதிவுகள் வலைதளத்தில் வலம் வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் ஜப்பானிய தூதரகம் மற்றும் இந்தோ-சீனா அறக்கட்டளை இணைந்து வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையில் ஜப்பான் திரைப்பட விழாவை கொண்டாட உள்ளனர். 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வடபழனியிலுள்ள ஆர்கேவி ஸ்டியோவில் இந்த விழா நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற உள்ள அறிமுக விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பங்கேற்கிறார். மற்ற இரு தினங்களிலும் மாலை 5 மணிக்கு படங்கள் திரையிடப்படுகின்றன.