மணிக்கு 1,200 கி.மீ வேகம்.. 3,000 கி.மீ தூர இலக்கும் துவம்சம்! இந்தியா-க்கு ஜப்பானால் ஜாக்பாட்!
க்வாட் கூட்டணியில் இணைந்துள்ள இந்தியா-ஜப்பான், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஜப்பான் நீருக்கடியில் இருந்து ஏவப்படும், ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
க்வாட் என்ற அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், ஜப்பானும், கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றங்கள் போன்ற விவகாரங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றன. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் இந்தியாவின் முயற்சிக்கு, ஜப்பானும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது.
இப்படியான சூழலில், ஜப்பானின் புதிய நடவடிக்கை ஒன்று, இந்தியாவை உச்சி குளிர வைத்துவிட்டது. அதாவது, 2027-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ள ஜப்பான், சுமார் 8.9 டிரில்லியன் யென் தொகையை ஏவுகணைகள், ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட ராணுவ அமைப்புகளுக்காக ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக, நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளது. ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணை, 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இது ஒலியின் வேகத்தை காட்டிலும் 5 மடங்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
நீருக்கடியில் உள்ள தளங்களில் இருந்து மறைந்திருந்து தாக்கக் கூடிய இந்த ஏவுகணை, ஏவப்பட்ட பிறகு, ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணித்து மறைந்துவிடும். இதனால், எதிரிகளின் ரேடார்களால் இதை கண்காணிக்கவோ, நடுவானில் இடைமறித்து அழிக்கவோ முடியாது. சீனா, ரஷ்யா, வடகொரிய ஆகிய நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு பெறவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த ஏவுகணையை உருவாக்க ஜப்பான் முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவும் ஹைப்பர்சோனிக் ஆயுத தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இரு நாடுகளுமே ஒரே மாதிரியான பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதால், எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானின் இந்த ஏவுகணைத் திட்டம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதை இது உணர்த்துகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜப்பானின் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டணியை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

