பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்.. பணிநீக்கம் செய்யப்பட்ட CRPF வீரர்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, இருதரப்பிலும் மாறிமாறி கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்முவின் கரோட்டா பகுதியைச் சேர்ந்தவர், முனீர் அகமது. இவர், ஏப்ரல் 2017இல் CRPFஇல் பணிக்குச் சேர்ந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி முனீர் அகமது, பாகிஸ்தானைச் சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ கால் மூலம் திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் இதனை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்குத் தெரியாமல் மறைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டதை தொடர்ந்து சி.ஆர்.பி.எஃப் வீரரின் திருமணமும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் பணிநீக்கத்தை எதிர்த்து அடுத்த சில நாட்களில் நீதிமன்றத்தை நாடப்போவதாக அந்த சிஆர்பிஎஃப் வீரர் தெரிவித்துள்ளார்.