2 மணிநேர மின்னல் வேக பயணம் - 500 கிமீ கிட்னியை சுமந்துசென்ற லம்போர்கினி கார்
கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு 500 கிமீ தூரம் சிறப்பு காரில் கிட்னியை கொண்டுசென்று சேர்த்த இத்தாலி போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
இத்தாலி காவல்துறையினரால் அதிவிரைவு போக்குவரத்து தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய வாகனம் லம்போர்கினி ஹுராகான் என்ற ஸ்போர்ட்ஸ் கார். அவசர உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக இத்தாலியின் வடக்குப் பகுதியான பண்டோவாவிலிருந்து ரோம் வரை ஆறு மணிநேரம் செல்லக்கூடிய 500 கிமீ தூரத்தை 2 மணிநேரத்தில் சென்றடைந்துள்ளது.
இந்த பிரத்யேக அதிவிரைவு காரானது உடல் உறுப்புகள், ப்ளாஸ்மா மற்றும் தடுப்பூசிகளைக் கொண்டுசெல்லும் முக்கிய தேவைகளுக்கு அந்நாட்டின் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் காரின் முன்பகுதியில் இதுபோன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக குளிர்சாதனப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி போலீஸாரின் இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.