
காசா பகுதியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு காரணமாக ஹமாஸ் படைக்குழுவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 5 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் தொடர்ந்து முதியவர்கள் வரை பலரும் கொடூரமாக இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது பாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார் இஸ்ரேலிய பெண்ணான மோர் பெய்டர் என்பவர்.
அதில் அவர், “இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றை பார்த்தேன். கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாதபடியான கொலையாக அது இருந்தது. அதில் கொல்லப்பட்டிருந்தது யாரோ ஒருவரல்ல. என்னுடைய பாட்டி. வீட்டில் இருந்த எனது பாட்டியை தாக்கிய ஹமாஸ் படையினர் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
வீடியோவில் வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக இருக்க அங்கு எனது பாட்டி உயிரற்று விழுந்து கிடக்கிறார். அவரை கொலை செய்த ஹமாஸ் படைக்குழுவினர், அதனை பாட்டியின் போனிலேயே வீடியோ எடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே பதிவிட்டுள்ளனர். பாட்டி இறந்த செய்தி எங்களுக்கே வீடியோவை பார்த்துதான் எங்களுக்குத் தெரிந்தது” என்று கண்ணீருடன் கதறியுள்ளார்.
“எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்த பாட்டி தற்போது எங்களுடன் இல்லை” என்று அவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது.