ஈரான் படைகளின் பிடியில் இஸ்ரேல் கப்பல்.. சிக்கிய 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்கள்! அடுத்து என்ன?

ஈரான் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் சிக்கியுள்ள 17 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஹெலிக்காப்டரில் இருந்து இறங்கும் ஈரானிய படைகள்
ஹெலிக்காப்டரில் இருந்து இறங்கும் ஈரானிய படைகள்pt web

ஹார்முஸ் ஜலசந்தி அருகே பயணித்துக் கொண்டிருந்த கப்பலில் ஈரானிய படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கி, ஏரிஸ் கப்பலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

சிரியா நாட்டில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் தாக்கி, பல மூத்த அதிகாரிகளை கொன்றதைத் தொடர்ந்து, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலம் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவி வரும் சூழலில், இஸ்ரேலுக்கு தொடர்புடையதாக கருதப்படும் ஏரிஸ் கப்பலை ஈரானிய படை கைப்பற்றியுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள 25 ஊழியர்களில், 17 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. கப்பலில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து, உறவினர்களிடையே பதற்றமான மனநிலை காணப்படுகிறது. கப்பலில் உள்ள தனது சகோதரரை பத்திரமாக மீட்டுத்தருமாறு சென்னையில் உள்ள உறவினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உறவினர் கூறுகையில், “அவரது அம்மா, அப்பா இருவரும் வயதானவர்கள். இருவரும் மன கஷ்டத்தில் உள்ளனர். சிக்கியுள்ள குழுவினரிடம் இருந்து எந்த தகவலும் வராததினால் 17 பேருடைய குடும்பத்தினரும் மனக்கஷ்டத்தில் உள்ளனர். 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்களும் அதில் ஒரு பெண்ணும் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.

கப்பலில் உள்ளவர்களை மீட்பது தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாவை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்திய தூதரக அதிகாரிகள் ஏரிஸ் கப்பலில் சிக்கி உள்ள 17 இந்திய ஊழியர்களை சந்திக்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் தற்போது ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறது எனவும் அங்குள்ள துறைமுகம் ஒன்றில் நங்கூரமிடும் எனவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள கப்பலில் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, பாகிஸ்தான், மற்றும் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த ஊழியர்களும் உள்ளனர். ஏரிஸ் கப்பலை இயக்கும் மெடிட்டரேயன் ஷிப்பிங் நிறுவனம் ஈரான் அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு ஊழியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பதட்டத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் எடுக்கக் கூடாது என்றும், உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுதுறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com