“இரண்டாவது லெபனான் போர்; விளைவுகள் மோசமானதாக இருக்கும்” - எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்

தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web

ஒருபுறம் காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தெற்கு லெபனானில் சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஹிஸ்புல்லா விரும்பினால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் காசா போர்
இஸ்ரேல் காசா போர்

ஒருபுறம் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் போல் இல்லாமல் ஹிஸ்புல்லா போராளிகள் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஹிஸ்புல்லா என்றால் அரபி மொழியில் கடவுளின் கட்சி என்று பொருள். 1980களில் கிடைத்த எண்ணெய் வளம், மேற்கத்திய நாடுகளின் பார்வையை மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தை நோக்கி திரும்பியது. அப்போது ஈராக், சிரியா, ஜோர்டான், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தோன்றியது. சிரியா மற்றும் ஈராக்கில் துணை ராணுவ குழுக்கள் மூலம் பயிற்சி மேற்கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர், ஈரானின் நேச நாட்டு போராளிகள் அமைப்புடன் நெருக்கமாக இருந்தனர்.

குறிப்பாக, லெபனான் அரசியலில் கடந்த 30 வருடங்களாக தலையிட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், கடந்த தேர்தலில் செல்வாக்கு இழந்தனர். இருந்தாலும், தெற்கு லெபனான் பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ், ஹவுதி, தாலிபான் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஹிஸ்புல்லா நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறது.. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கிய நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது பிரச்னைகள் எல்லையில் நடந்து வருகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய அக்டோபர் 7ம் தேதி முதல் ஹிஸ்புல்லா அமைப்பினரும், வடக்கு இஸ்ரேல் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் உடன் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் போரிட்டு வரும் நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடக்கு இஸ்ரேலில் உள்ள யூத குடியிருப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்படும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் வடக்கு பகுதியில் உள்ள ஒரு லட்சம் யூதர்களை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது.

ஹிஸ்புல்லா, இஸ்ரேல் உடன் போரில் ஈடுபட நினைத்தால் அது இரண்டாவது லெபனான் போராக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நாளில் இருந்து இஸ்ரேல் தொடர்ச்சியாக லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அமெரிக்கா தலையிட்டு அப்பாவி மக்கள் இறப்பதை தடுக்க வேண்டும் என்றும் லெபனான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com