இஸ்ரேல்: நீதித்துறை அதிகாரத்தைக் குறைத்து நிறைவேற்றப்பட்ட மசோதா.. போராட்டத்தில் மக்கள்!

நீதித்துறையின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் கொண்டுவந்த சட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றம், போராட்டம்
இஸ்ரேல் நாடாளுமன்றம், போராட்டம்ட்விட்டர்

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நீதிமன்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் மசோதாவை, அரசு சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் தீவிரமடைந்ததால் அந்த மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கடந்த மார்ச் மாதம் அரசு தெரிவித்தது. ஆனாலும் போராட்டங்கள் தொடர்ந்தபடி இருந்தது. இந்த நிலையில் போராட்டங்களுக்கு மத்தியில் நீதிமன்ற அதிகாரங்களைக் குறைக்கும் மசோதா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் நிறைவேறியது.

பெஞ்சமின் நெதன்யாகு, போராட்டம்
பெஞ்சமின் நெதன்யாகு, போராட்டம்ட்விட்டர்

அப்போது, இஸ்ரேல் நாடாளுமன்றம் கூடிய முதல் அமர்வில் நீதிமன்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் மசோதா ஒப்புதலுக்கு முன்மொழியப்பட்டது. மேலும், மசோதா மீதும் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகள் கிடைத்தன. எதிராக 56 வாக்குகள் பதிவானது. இதையடுத்து, மசோதா நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு எம்பிக்கள் இந்தச் சட்டங்களுக்கு நேற்று முன்தினம் (ஜூலை24) ஒப்புதல் அளித்தனர். அதேநேரத்தில், எதிர்க்கட்சி எம்பிக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறிய நிலையில், 64-0 என்கிற கணக்கில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் உச்ச நீதிமன்றத்தின் சட்டங்களை மறுபரீசிலனை செய்து, அதன் அதிகாரத்தைக் குறைக்க முடியும் என்ற வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு கிடைத்துள்ளது. அதாவது, நீதிமன்ற உத்தரவுகளை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை மூலம் மீறலாம்.

அடுத்து, உச்ச நீதிமன்றம் உட்பட நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும். இதன்மூலம், யார் நீதிபதியாக வேண்டும் என்பது குறித்து தீர்க்கமான முடிவை அரசாங்கம் எடுக்கும் சூழல் உருவாகும். இறுதியாக, இஸ்ரேல் அமைச்சர்கள் தங்கள் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைக்குக் கீழ்படிய வேண்டிய அவசியமிருக்காது. இதனால் உச்ச நீதிமன்றம் பலவீனப்படுத்தப்படும் என்றும், சட்ட ஆலோசர்கள் மற்றும் நீதிபதிகளின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதைக் கண்டித்து ஏற்கெனவே இஸ்ரேல் நாட்டில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மசோதா மூலம் அவை மேலும் வெடிக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் போராட்டம்
இஸ்ரேல் போராட்டம்ட்விட்டர்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை அந்நாட்டு நீதித்துறை தீவிரமாகக் கையில் எடுத்து விசாரித்த நிலையில், நெதன்யாகு பிரதமர் பதவியை இழக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே நெதன்யாகு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com