
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையே நடைபெறும் தாக்குதல் 10 ஆண்டுகளில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சர்வதேச அளவில் தேவைப்படும் கச்சா எண்ணெய்யை வழங்குவதில் வளைகுடா நாடுகள் 3-ஆவது இடத்தில் உள்ள நிலையில், அப்பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே தாக்குதல் தொடங்கும் முன், இந்த மாதத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 10 டாலர் வரை குறைந்திருந்தது. ஆனால், தாக்குதல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து விலையேற தொடங்கிய நிலையில், தற்போது 5 சதவிகிதம் உயர்ந்து 88.53 டாலரில் வர்த்தகமாகிறது.
ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவும் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்ததன் காரணமாக, சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் செப்டம்பர் 2ஆம் வாரம் முதல் 90 டாலருக்கும் மேல் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், அமெரிக்க டாலர் வலுவடைய தொடங்கியதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்து இறக்கத்துடன் காணப்பட்டது.
அக்டோபர் 2-ஆம் தேதி 90.71 டாலரில் வர்த்தகமான பிரெண்ட் கச்சா எண்ணெய், 3-ஆம் தேதி 91.56 டாலராக ஏற்றம் கண்டது. அதன்பிறகாக, 4, 5-ஆம் தேதிகளில் 84 டாலரில் வர்த்தகமான நிலையில், 3-ஆவது நாளாக தொடரும் போர் காரணமாக, இன்று 89 டாலராக ஏற்றம் கண்டுள்ளது.