இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் முற்றியுள்ள மோதல்!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் முற்றியுள்ள மோதல்!
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் முற்றியுள்ள மோதல்!

உலகில் பல நாடுகள் கொரோனாவை எதிர்த்து கடும் போர் புரிந்து கொண்டுள்ள நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் முற்றியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று ஜெருசலேமில் உள்ள அல் - அக்சா மசூதிக்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையிருடன் நடைபெற்ற மோதலில் 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்ததே இந்த மோதலின் தொடக்கமாக அமைந்தது.1967 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர். 1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின்பு கிழக்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980-ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமை தங்களுடன் இணைத்துக் கொண்டது.

ஜெருசலேம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. எதிர்காலத்தில் தங்களுடைய நாட்டுக்கு கிழக்கு ஜெருசலேம்தான் தலைநகராக அமையும் என்று பாலத்தீனர்கள் கூறுகிறார்கள். கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள அல்-அக்சா மசூதி இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக கருதப்படுகிறது. மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர்.

இதன் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீன மோதலால் அடிக்கடி பற்றி எரியும் நகரமாக உள்ளது ஜெருசலேம். கடந்த திங்கட்கிழமை அல் அக்சா மசூதிக்கு வெளியே நிகழ்ந்த மோதலைத் தொடர்ந்து, பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து 100க்கும் அதிகமான ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 35 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தியுள்ள நிலையில், தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கேரளாவின் இடுக்கியைச் சேர்ந்த 30 வயதுப் பெண் சவும்யா உயிரிழந்தார். காஸா எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இஸ்ரேலின் அஸ்கேலான் நகரில் வயதான பெண்மணி ஒருவரை கவனித்துக் கொள்ளும் பொறுப்பினை இவர் ஏற்றிருந்தார். தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சவும்யா இந்தியாவில் இருந்த தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com