இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்: காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தொடரும் பதற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்: காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தொடரும் பதற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்: காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்; தொடரும் பதற்றம்
Published on

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நாளுக்கு நாள் தீவிரமடையும் மோதலால் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து போர்ப் பதற்றச் சூழல் நிலவி வருகிறது.

காசா நகரிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் முகமது அபு செல்மியா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், "காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். ராக்கெட் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலியத் தாக்குதல்களால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து, மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய காசா பகுதிக்கும் இடையிலான எல்லையில் நிலைமை கடந்த ஒரு வாரமாக மோசமடைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், பல பாலஸ்தீனிய குடும்பங்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற இஸ்ரேலிய நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின்னர் கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்கள் அதிகரித்தன.


சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா நகரில் உள்ள அல் ஜசீரா மற்றும் அமெரிக்கன் அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களைக் கொண்ட ஒரு கட்டடத்தை அழித்தன. இந்தச் சூழலில் தற்போது நிலவும் நெருக்கடி குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்புக் குழு இன்று கூடும் என பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அறிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த ராக்கெட் தாக்குதல்களில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். பாலஸ்தீனத்தில் 40 குழந்தைகள் உட்பட 140-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன; 1300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பேச்சுவார்த்தைக்கு முயற்சி:

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனைப்பகுதியை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பினரும் ஏவுகணைகள், ராக்கெட்டுகளால் மாறி மாறி தாக்கி வருகின்றனர்.

பதற்றத்தைத் தணிக்க உலக நாடுகள் முயற்சித்து வரும் சூழலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களிடமும் அமைதியைக் கடைபிடிக்க பைடன் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் அலுவலகங்கள் அமைந்திருந்த கட்டடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com