மேற்காசிய நாடுகள் மீது கவனம் செலுத்தும் சீனா.. இனி அமெரிக்கா? இஸ்ரேல்-ஹமாஸ் மோதலும் சர்வதேச சூழலும்!

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவியை செய்வதற்கு அமெரிக்காவில் உள்நாட்டு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட பல கேள்விகளின் முடிவுகளின் மூலமும் இப்போருக்கான முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
israel hamas war
israel hamas warpt web

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கினர். ‘ஆபரேஷன் அல்-அக்‌ஷா பிளட்’ என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 20 நிமிடங்களில் சுமார் 5000 ராக்கெட் குண்டுகளை வீசியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். சிறிய ரக விமானங்கள் கடல் எனப் பல வழிகளில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவினர். போர் சூழல் மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

இப்பிரச்சனையில் உலக நாடுகளின் பங்கு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஹிட்லரின் யூத வேட்டையால் உதயமான, உறுதியான தனி நாடு எண்ணம்!

மாறிவரும் பூகோள அரசியல் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் இப்பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹிட்லர் யூதர்கள் மேல்கொண்டிருந்த வெறுப்பு அதன் நீட்சியாக படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் போன்றவற்றின் காரணமாக இஸ்ரேலுக்கான (யூதர்களுக்கான தனி நாடு) ஆதரவு தொடர்ச்சியாக அதிகரித்தது.

பனிப்போர் காலத்திலும் இஸ்ரேலை ஆதரித்த சோவியத் யூனியன், அமெரிக்கா!

இதன் காரணமாக இஸ்ரேலுக்கான ஆதரவு நிலைப்பாடு தான் அனைத்து நாடுகளும் எடுத்தன. சோவியத் யூனியன், அமெரிக்கா இடையேயான பனிப்போர் நடந்த நாட்களில் கூட இரு நாடுகளும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டைத்தான் எடுத்தன. இதில் சோவியத் யூனியன் இஸ்ரேல் விவகாரத்தில் இருந்து விலகியிருந்தாலும் கூட எந்த ஒரு எதிர் நடவடிக்கைகளையும் எடுக்காமல் தான் சோவியத் யூனியன் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது.

ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின் மாறிய சூழல்!

ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின் சூழ்நிலை மாறியுள்ளது. பல துருவ அரசியல் உலக நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளது. அமெரிக்கா மட்டுமே வல்லாதிக்க நாடாக இருந்த சூழல் மாறி பல துருவங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. சீனா இதுவரை உள்நாட்டு வளர்ச்சியை மட்டுமே பார்த்து வந்த சூழலில் தற்போது மேற்காசிய நாடுகளிலும் அவர்களது கவனத்தை திசைதிருப்ப ஆரம்பித்துள்ளனர்.

சீனாவின் பக்கள் சாயும் மேற்காசிய நாடுகள்! இனி அமெரிக்காவின் ஒற்றை ஆதிக்கம் கிடையாது!

மேற்காசிய நாடுகள் மொத்தமும் ஈரான் தவிர்த்து இஸ்லாமிய நாடுகள் உட்பட அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. தற்போது அந்நாடுகள் சீனாவின் பக்கம் சாயத் தொடங்கியுள்ளார்களா என்ற கேள்வி உள்ளது. இதற்கு காரணம் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே பனிப்போர் மாதிரியான சூழல் இருந்தது. அந்த பனிப்போரை தீர்த்து வைத்துள்ளது சீனா. சீனா தனது ஆதிக்கத்தை மேற்காசிய நாடுகளிடையே செலுத்த ஆரம்பித்துள்ளது.

மாறும் சூழலால் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு கூடும்!

அமெரிக்காவின் வளையத்தில் இருந்து மேற்காசிய நாடுகள் வெளியில் செல்லும் போது ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஹமாஸ் என்ற அமைப்பு மட்டும் தன்னந்தனியாக தாக்குதல் நடத்தி இஸ்ரேல் போன்ற நாட்டை வீழ்த்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பு இதற்கு முன் பலமுறை தாக்குதல் நடத்தி இருந்தாலும் அவை சிறிய ரக தாக்குதலாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது தொடர்ச்சியாக அவர்களால் தாக்குதல் நடத்த முடிகிறது. அவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கின்றது. பல்வேறு இஸ்ரேலிய ராணுவ வீரர்களை, அதிகாரிகளை அவர்கள் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.

இம்மாதிரியான சூழல்களில் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெறுவதற்கு ஈரான் போன்ற நாடுகள் பின்னணியில் இருக்கும் என்று பல ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். லெபனான் போன்ற நாடுகளும் அங்குள்ள ஹிஸ்புல்லா என்ற அமைப்புகளும் ஹமாஸ்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இம்மாதிரியான சூழ்நிலை மாற்றத்திற்கு காரணம் தற்போதுள்ள உலக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான்.

ரஷ்யாவிற்கு ஈரான் பல்வேறு ராணுவ தளவாட உதவிகளை உக்ரைன் போரில் தற்போது செய்யத் துவங்கியுள்ளது. ட்ரோன்களை உற்பத்தி செய்து ரஷ்யாவிற்கு அனுப்புகின்றனர். ட்ரோன் என்ற ஆளில்லா பறக்கும் விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி உக்ரைனில் பெரிய செலவில்லாமல் அதிக சேதத்தை உருவாக்கி வருகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத மாதிரி சர்வதேச சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இந்த சூழலில் ரஷ்யாவும் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சீனாவும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இது போன்ற ஒரு சூழ்நிலைகளை பார்க்க முடியாது. உலக அரசியல் சூழ்நிலை மாறி இருப்பதன் காரணமாக ஹமாஸால் இஸ்ரேலை எதிர்த்து வலுவான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. இது உலகளவில் உடனடியாக தீர்க்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

பலத்தை இழக்குமா அமெரிக்கா? சீனா பெறப்போகும் பலன் என்ன?

பலதுருவ அரசியலில் உலக நாடுகள் பிரிந்திருக்கும் சூழலில் அனைத்து நாடுகளும் ஒற்றைக் குரலில் இதை நிறுத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவார்களா? அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்களா? இதில் பயனடையப் போவது யார்? சீனாவிற்கு இப்பிரச்சனையின் மூலம் கிடைக்கும் பலம் என்ன? அமெரிக்கா இதன் மூலம் பலத்தை இழக்குமா? அமெரிக்கா தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை இழக்கிறதா? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

அமெரிக்காவில் கிளம்பிய உள்நாட்டு எதிர்ப்புகள்!

அமெரிக்காவின் பொருளாதாரம் பின் தங்கியுள்ள சூழலில் அமெரிக்கா தொடர்ச்சியாக முழு ஆதரவை கொடுத்து இந்த இடத்தில் களமிறங்குமா? ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவியை செய்வதற்கு அமெரிக்காவில் உள்நாட்டு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட பல கேள்விகளின் முடிவுகளின் மூலமும் இப்போருக்கான முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com