\
Israel Gaza Strike 100 Bodies Found After 3 Years Funeral Held
Gaza Mass Funeral Reuters

2023-இல் நடந்த தாக்குதல்.. 3 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த 100 உடல்கள்.. காஸாவில் சோகம்!

இந்த இறுதிச்சடங்கு, காஸாவில் போரால் ஏற்பட்ட அழிவின் மற்றொரு சோகமான காட்சியாக மாறியுள்ளது. பல குடும்பங்களுக்கு, ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது உறவினர்களுக்கு இறுதி விடை கொடுக்க இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

2023 அக்டோபரில் தொடங்கிய கொடூர இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காஸா நிலைகுலைந்து, ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி, உணவு மற்றும் புகலிடமின்றி மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்த ஆரம்ப கட்டத்தில், காஸா நகரில் Zeitoun பகுதியில் உள்ள ‘தாஜ்’ (Taj) குடியிருப்பு வளாகத்தின் மீது இஸ்ரேலிய விமானப்படை தொடர் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியது. இதில் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகின.

Gaza
GazaReuters

இந்தத் தாக்குதலின்போது கட்டட இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கி உயிரிழந்தனர். மீட்புக் குழுவினரால் உடனடியாக உடல்களை வெளியே எடுக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, காஸா மீட்புக் குழுவினர் (Civil Defense) அந்த கட்டட இடிபாடுகளைத் தோண்டி, அங்கு புதைந்துகிடந்த 100-க்கும் மேற்பட்ட உடல்களையும் மனித எஞ்சிய பாகங்களையும் மீட்டெடுத்தனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவர்.

இவ்வாறு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து சமீபத்தில் மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனர்களின் உடல்கள் மற்றும் மனித உடல் பாகங்களுக்கும் இன்று (அக்டோபர் 1) இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் சுமார் 60 குழந்தைகள் இருந்ததாக காஸா சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இடிந்து கிடக்கும் வீடுகளின் அருகே உடல்கள் மற்றும் எச்சங்கள் பாலஸ்தீனக் கொடிகளால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இறுதிப் பிரார்த்தனைக்குப் பிறகு அவை Zeitoun பகுதியில் உள்ள Al-Ahli கல்லறையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த உடல்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் உயிரிழந்தவர்கள் அல்ல. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஸா சிவில் பாதுகாப்பு குழுக்கள் கடந்த ஜூலை 19-ஆம் தேதி தொடங்கிய இரண்டாவதுகட்ட மீட்புப் பணியின் ஒரு பகுதியாக இந்த உடல்களைத் தேடி மீட்டுள்ளன.

Gaza Mass Funeral
Gaza Mass Funeral Reuters

ஆனால், இந்தப் பணிகளுக்கு தேவையான கனரக இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமான அளவில் இல்லை. சில பழைய இயந்திரங்கள் மட்டுமே இருப்பதால், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகவும் கடினமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவதுகட்ட திட்டத்தில் காஸா நகரம் மற்றும் வடக்கு, மத்திய காஸா பகுதிகளில் அழிக்கப்பட்ட 147 வீடுகளில் தேடுதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சுமார் 1,072 பேரின் உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்தமாக 8000 உடல்கள் சிக்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த இறுதிச்சடங்கு, காஸாவில் போரால் ஏற்பட்ட அழிவின் மற்றொரு சோகமான காட்சியாக மாறியுள்ளது. பல குடும்பங்களுக்கு, ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது உறவினர்களுக்கு இறுதி விடை கொடுக்க இந்த நிகழ்வு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பேரிழப்புகளை கூகுள் மேப் தளத்தின் புதுப்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தது.

Israel Gaza Strike 100 Bodies Found After 3 Years Funeral Held
இஸ்ரேல் போரின் கோர முகம்! காசாவில் 82% கட்டடங்கள் சிதைவு.. வெளியான செயற்கைக்கோள் படம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com