ஹமாஸ் பிரிவினரை வேட்டையாடி அழிக்க “நிலி” என்ற தனிப்படை அமைப்பு! இறங்கி அடிக்க தயாராகும் இஸ்ரேல்!

ஹமாஸ் பிரிவினரை வேட்டையாடி அழிக்க சிறப்பு படையை உருவாகியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Israel - Hamas
Israel - Hamasweb

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 16வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸின் தாக்குதலை அடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் அக்டோபர் ஏழாம் தேதி நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக "நிலி" என்கிற சிறப்பு படையை இஸ்ரேல் ராணுவம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிலி என்றால் என்ன? இப்படையின் வேலை என்ன?

நிலி என்றால் ஹீப்ரூ மொழியில் "இஸ்ரேலின் லட்சியம் பொய்க்காது" எனும் பொருளாகும். இஸ்ரேலுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதலான அக்டோபர் 7ல் பங்கு வகித்த ஒவ்வொரு நபரையும் வேட்டையாடுவதற்கும் அகற்றுவதற்கும் இந்த பிரிவு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் குழுவின் இராணுவப் பிரிவிற்குள் இருக்கும் சிறப்பு கமாண்டோ பிரிவான நுக்பா உறுப்பினர்களை குறிவைப்பதே அதன் முதன்மையான செயல்திட்டம் ஆகும்.

Israel - Hamas
Israel - Hamas

ராணுவ சிறப்பு கமாண்டோக்கள் மற்றும் உளவு பிரிவினர்கள் இந்த படையில் இருப்பார்கள் என்றும், ஹமாஸ் போன்று கொரில்லா தாக்குதல் நடத்தவும் "நிலி" பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிணைக்கைதிகளின் எண்ணிக்கை உயர்வு!

பிணை கைதிகளின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று 210 என இஸ்ரேல் கூறிய நிலையில், இன்று 2 பிணை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாலஸ்தீன பத்திரிகையாளர் மரணம்

பாலஸ்தீன பத்திரிகையாளர் ரூஸ்தி சாராஜ் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டார். காஸாவில் உள்ள அவரது வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீன குழந்தை பலி!

இதுவரை 1688 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசின் சமூக வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 120க்கும் மேற்பட்ட குழந்தைகள் சராசரியாக மரணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

15 நிமிடத்திற்கு ஒரு பாலஸ்தீன குழந்தை மரணிப்பதாக மத்திய கிழக்கு ஆசியாவை கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com