மதுபாட்டிலில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்புக் கேட்டது இஸ்ரேல் நிறுவனம்
மதுபாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை பொறித்ததற்கு, இஸ்ரேல் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மக்கா ப்ரூவரி என்ற நிறுவனம், பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை இடம்பெறச் செய்திருந்தது. இது இந்திய அரசின் கவனத்துக்கு வந்தது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பிரச்னை எழுப்பப்பட்டது. இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்த நிறுவனம் காந்தி படத்தை மதுபாட்டிலில் பொறித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுபான நிறுவன மேலாளர் கிளாட் ரோர், மதுபாட்டிலில் காந்தி படம் பொறிக்கப் பட்டதற்காக இந்தியர்களிடமும், இந்திய அரசிடமும் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபாட்டிலில் இருந்து காந்தியின் படத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.