தாக்குதலுக்குத் தயாராகுங்கள்! ஈரானை மீண்டும் குறிவைக்கும் இஸ்ரேல்! நெதன்யாகுவின் அதிரடி முடிவு?
செய்தியாளர் - ராஜ்குமார். ர
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியது. இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ஈரானுடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டால் மீண்டும் ராணுவத் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில்தான், ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை அந்நாட்டு ராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேலின் பொதுத் தொலைக்காட்சி நிறுவனமான KAN வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் மீது சாத்தியமான ராணுவத் தாக்குதலை முன்னெடுப்பதற்கான தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சரவை ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்காட் புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். .இத்தகைய அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இடைக்காலப் பிரதமராகத் செயல்பட்டு வரும் நெதன்யாகுவுக்கு ஐசன்காட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நெதன்யாகுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உடனடி அச்சுறுத்தல் இல்லாத நிலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்தி தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்துள்ள இடைக்கால அரசாங்கம், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, புதிய அரசு பதவியேற்கும் வரை காத்திருக்கக்கூடிய ராணுவ நடவடிக்கைகளை தற்போதைய அரசு முன்னெடுக்கக் கூடாது என்றும் ஐசன்காட் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேலின் இந்த அரசியல் மாற்றம் ஈரான் மீதான அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
