'ஹிட்லரும் யூத வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம்'- ரஷ்யாவின் கருத்தால் இஸ்ரேல் கடும் கோபம்

'ஹிட்லரும் யூத வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம்'- ரஷ்யாவின் கருத்தால் இஸ்ரேல் கடும் கோபம்
'ஹிட்லரும் யூத வம்சாவளியை சேர்ந்தவராக இருக்கலாம்'- ரஷ்யாவின் கருத்தால் இஸ்ரேல் கடும் கோபம்

அடால்ஃப் ஹிட்லர் யூத வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ கூறியதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது நாஜிக்களின் இனப்படுகொலையை இழிவுபடுத்திய மன்னிக்க முடியாத பொய் என்று கூறியது.

இத்தாலிய தொலைக்காட்சியில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்விடம், உக்ரைனின் சொந்த அதிபரான ஜெலன்ஸ்கி யூதராக இருந்தால், உக்ரைனை "டீநாசிஃபை" செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "ஒருவேளை ஹிட்லரும் யூத வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நான் நினைக்கிறேன். மிகப் பெரிய யூத எதிர்ப்பாளர்கள் யூதர்கள்தான் என்று ஞானமுள்ள யூத மக்கள் சொல்வதை நீண்ட காலமாக நாங்கள் கேட்டு வருகிறோம்," என்று கூறினார்.



இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் வெளியிட்ட அறிக்கையில், "இத்தகைய பொய்கள் யூதர்களுக்கு எதிராக வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான குற்றங்கள் அவர்களாலேயே நடந்தது என்று குற்றம் சாட்டுவதாகும். யூத மக்களின் படுகொலையை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும," என்று கூறினார்.

இந்த கருத்தின் காரணமாக ரஷ்யா - இஸ்ரேல் இடையிலான உறவு கடுமையாக மோசமடைந்திருப்பதன் அடையாளமாக, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் ரஷ்ய தூதரை அழைத்து இது தொடர்பாக ரஷ்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியது.



பல மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் கருத்துக்களைக் கண்டித்தனர். இது குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி விளாதிமிர் ஜெலென்ஸ்கி இரண்டாம் உலகப் போரின் படிப்பினைகளை ரஷ்யா மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால் இது குறித்து இஸ்ரேலுக்கான ரஷ்ய தூதரகமோ அல்லது ரஷ்ய அரசோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஹிட்லரின் தாத்தாக்களில் ஒருவரின் அடையாளம் தெரியவில்லை, ஆனால் அவர் ஒரு யூதராக இருக்கலாம் என்று சில ஊகங்கள் உள்ளன, ஆனால் இது குறித்த எந்த ஆதாரமும் இல்லை என்ற தகவலும் தற்போது அதிகம் பகிரப்படுகிறது.



பிப்ரவரியில் ரஷ்ய தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் அண்டை நாடான சிரியாவில் அதிகாரம் செலுத்தும் ரஷ்யாவுடனான உறவுகளை கையாளுவதில் எச்சரிக்கையாக இருக்கும் இஸ்ரேல் ஆரம்பத்தில் ரஷ்யாவை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்தது. மேலும், ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது முறையான தடைகளையும்  அமல்படுத்தவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com