தீர்கிறதா ஆயுதங்கள்..? இஸ்ரேலை கைவிடும் அமெரிக்கா.. ஈரானால் திணறும் ட்ரம்ப்!
அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு திறன் குறைந்துள்ளதால் வரும் நாட்களில் போர் தீவிரமாகும் பட்சத்தில், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த முடியாமல் போகலாம் என்று ஜெனரல் கிரின்கோவிட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் டிஸ்ட்ராயர் கப்பல் இருந்தால் மட்டுமே இஸ்ரேலைக் காப்பாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது. இதேசமயம், ஹவுதி தாக்குதல்கள், செங்கடல் பாதுகாப்பு, THAAD ஏவுகணை கையிருப்பு குறைவு ஆகியவை அமெரிக்க ராணுவத்தைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளன.
செய்தியாளர்; M. மீரா
ஈரான்–இஸ்ரேல் மோதல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் ஏவுகணைத் தடுப்பு திறன் மற்றும் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை குறித்து புதிய கவலை எழுந்துள்ளது.
இஸ்ரேலை ஈரானிய ஏவுகணைகளில் இருந்து பாதுகாப்பதற்கும், அதேநேரத்தில் அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவில் டிஸ்ட்ராயர் (destroyer) வகை போர்க்கப்பல்கள் இல்லை என அமெரிக்க ஐரோப்பியக் கட்டளையின் தலைவர் ஜெனரல் அலெக்சிஸ் கிரின்கோவிட்ஸ் எச்சரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பென்டகன் தலைமைக்கு அவர் அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தில் மேலும் ஒரு டிஸ்ட்ராயர் கப்பல் கிடைக்காவிட்டால், இஸ்ரேலைக் கைவிட்டு அமெரிக்காவைக் காப்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அமெரிக்க ராணுவம் எதிர்கொள்ளும் முக்கியமான சவாலாகப் பார்க்கப்படுகிறது. தற்போது ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுமார் 11 டிஸ்ட்ராயர் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹவுதி தாக்குதல்களை எதிர்கொள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பணியில் உள்ளன. இதனால் இஸ்ரேலை நோக்கிவரும் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கான கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், நீண்டகாலமாக நடைபெறும் தொடர் தாக்குதல்களால் ஏவுகணை இடைமறிப்பான்களின் கையிருப்பும் அமரிக்காவிடம் குறைந்துள்ளது. ஜூன் மாத மோதலின்போது மட்டும் 100-க்கும் மேற்பட்ட THAAD இடைமறிப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு கொடுத்து நட்பில் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு தங்களது நிலப்பரப்பு, ராணுவத் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள், போரின் தாக்கத்தை கடுமையாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடனான நட்பை வளைகுடா நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது
மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் . எண்ணெய் வயல்கள் மற்றும் செயலாக்க மையங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ரூயிஸ் சுத்திகரிப்பு நிலையம், கத்தாரின் North Field எரிவாயு வளாகம் உள்ளிட்ட முக்கிய எரிசக்தி மையங்கள் குறித்து ஈரான் லிஸ்ட் எடுத்து தாக்குதலுக்குத் தயாராகிறது எனக் கூறப்படுகிறது .
இதனால், மத்திய கிழக்கு மோதல் தற்போது இஸ்ரேல்–ஈரான் எல்லையைத் தாண்டி, அமெரிக்க ராணுவ வளங்கள், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலக எரிசக்தி சந்தை என பல தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.

