தடாலடி பேச்சு, மிரட்டும் தொனி.. மோசமான அணுகுமுறையால் உலகை இன்னலுக்கு இழுத்துச் செல்கிறாரா ட்ரம்ப்?
பெரியண்ணன் மனப்பான்மை
இந்த உலகம் பல அரசியல் தலைவர்களை கண்டுள்ளது. மார்டின் லூதர் கிங், லெனின், காந்தி போன்ற மகத்தான தலைவர்களை கண்டுள்ள அதேவேளையில் ஹிட்லர், முசோலினி போன்ற மோசமான அரசியல் தலைவர்களையும் கண்டுள்ளது. தற்கால அரசியல் உலகில் அரசியலுக்கு எவ்வித பொருத்தமும் இல்லாமல் தடலடியான பேச்சு, முன்னுக்கு பின் முரணான தகவல்கள் போன்றவற்றிற்கு பெயர் போனவராக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்கா என்றாலே பெரியண்ணன் மனப்பான்மையில் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது வழக்கமானதுதான். தொன்றுதொட்டு அமெரிக்க தலைவர்கள் அந்த மனப்பான்மையில்தான் நடந்து கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில்தான் டொனால்டு ட்ரம்பும் வந்திருக்கிறார். இரண்டாவது முறையாக பதவியேற்றது முதலே அவரது அணுகுமுறைகள் மிக மோசமான வகையில் வெளிப்பட்டு வருகிறது. மிக வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசுவது, தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வம்புக்கு இழுப்பது, கட்டாயப்படுத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பது என அவரது செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களை சந்தித்து வருகின்றன.
தற்போது நடைபெற்று வரும் ஈரான் - இஸ்ரேல் மோதல் விவகாரத்திலும், சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்திலும் அதிபர் ட்ரம்பின் பேச்சும் அணுகுமுறையும் மிகவும் மோசமானதாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்டுத்தான் இருதரப்பினரும் மோதலை முடிவுக்கு கொண்டுவந்தார்கள் என வெளிப்படையாகவே சொன்னார். ஒருமுறை இருமுறை அல்ல.. மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், இந்தியத் தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. தற்போது பிரதமர் நரேந்திர மோடியே அமெரிக்காவின் தலையீடு இல்லையென ட்ரம்பிடம் தெரிவிக்கும் அளவிற்கு அது வந்துள்ளது. அப்படியென்றால் நடக்காத ஒன்றை எப்படி அவ்வளவு தைரியமாக அதிபராக இருக்கும் ட்ரம்பால் சொல்ல முடிகிறது. ஒரு அரசியல் தலைவருக்கு என்று நாகரீகம் என்று இருக்கிறது அல்லவா. ஈரான் விவகாரத்தில் மிரட்டும் தொனியிலே அவரது பேச்சு இருக்கிறது.
எல்லாவற்றிலும் முன்னிலை....
டொனால்டு ட்ரம்பின் அணுகுமுறை குறித்து பேராசிரியர் க்ளாட்சன் சேவியர் நம்மிடம் பேசுகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த முறை பதவி ஏற்ற போதும் தற்போது பதிவியில் இருக்கும் போதும் பொதுவெளியில் தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆரம்பத்திலிருந்தே இம்மாதிரியான பிரச்னைகளில் அவர் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறார். நிறைய முரண்பாடான கருத்துகளை தெரிவிக்கிறார் என்பதில் ஆச்சரியமே இல்லை. உளவியல் ரீதியாகவே அவருக்கு சிக்கல்களாக இருக்கின்றன.
அதிபர் டிரம்ப் எல்லாவற்றிலும் தன்னை முன்னிலை படுத்திக்கொண்டு தன்னை பற்றியே மக்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறார். இதன் காரணமாக அவரது பேச்சு முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கும். மேலும், டிரம்ப் பல்வேறு நேரங்களில் எவற்றையெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாதோ அவை எல்லாவற்றையும் இயல்பாகவே பேசி வருகிறார். இதையே தன்னுடைய அரசியலிலும் கடைபிடிக்கிறார்.
தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற தைரியம்
தான் என எப்போதும் முன்னிறுத்தும் அவரிடம் அகந்தை அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். அவரது செயல்களில் மூலம் மக்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமென விரும்புகிறார். அப்படி விரும்புவதில் தவறில்லை. ஆனால், அவர் அதை செயல்படுத்துவதில் தான் அதிகமான சிக்கல்கள் தெரிய வருகின்றன. மன ஸ்திரத்தன்மை இல்லாமல் பேசுகிறார். தம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்கின்ற தைரியமும் அவரிடம் இருக்கிறது. பொய்களை சொன்னாலும் அதனை மக்கள் நம்பக்கூடிய வகையில் மிக நேர்த்தியாக சொல்லக்கூடியவர். அவர் பேசியது பொய்யாக இருந்தாலும் அதற்கு பொறுப்பேற்கக்கூடிய தன்மை ட்ரம்பிடம் இல்லை.
இருந்தாலும், தனது அணுகுமுறைகளின் மூலம் நிறைய விஷயங்களை சாதித்தித்தும் காட்டியிருக்கிறார். ஒப்பந்தங்களை போடுவது டிரம்பிற்கு ஒரு கை வந்த கலை. எந்தவொரு சிக்கலாக இருந்தாலும், மக்களை இக்கட்டான நிலைமையில் நிறுத்தி தனக்கு தேவையான ஒப்பந்தத்தை போட வைத்து, அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த வைக்கிறதை ரியல் எஸ்டேட் ஜெயண்ட்டாக (Real estate giant) இருக்கும் போது செய்துள்ளார். அதனை தற்போதும் செய்ய வேண்டுமென நினைக்கிறார்.
ட்ரம்பை உக்ரைன் அதிபர் நேரில் சந்தித்து பேசியபோது, அவருக்குக் காட்டிய மரியாதை, அவரை அச்சுறுத்தும் விதமாக மிரட்டும் தொணியில் பேசியது எல்லாமே, ‘நான் சொல்வதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும்’ என்பதைக் குறிக்கிறது. அதேபோன்று, ஜி-7 மாநாட்டிலும் பாதியிலேயே வெளியேறினார். இதுகுறித்து, அமெரிக்க ஐக்கியப் பேரவையின் முக்கிய பிரமுகர் ஒருவர், டிரம்ப் ஏன் முன்னுக்கு பின் முரனாகவும், முரட்டுத்தனமாகவும் பேசிவருகிறார் என கூறியிருந்தார்.
தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
இப்படி முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்வதின் மூலம் இதுபோன்ற உலகத் தலைவர்கள் உலகிற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், வெளிப்படைத் தன்மையில்லாமல் செயல்படலாம் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்தி வருகின்றனர். இந்த நடத்தை மிகப்பெரிய கேள்விகளை முன்வைத்தாலும், தனது நாட்டின் நலனுக்காகவே இதைச் செய்கிறேன் என மார்தட்டி பேசிக்கொள்ளும் தொனியும் பாங்கும் இவரிடம் அதிகமாக இருக்கிறது.
அதேபோல், இஸ்ரேல்-ஈரான் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் எதையும் பெரிதாக சாதித்துவிட முடியாது. ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் ஏற்கனவே தர்மசங்கடத்தில்தான் இருக்கிறார். அவர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடம் போரில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்திருந்தார். எங்கு இஸ்ரேல் தன்னை போரில் ஈடுபட வைத்திவிடுமோ என்ற பயமும், தயக்கமும் டிரம்பிடம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மக்களின் நலன்களை சுமக்கும், மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் உலகத் தலைவர்கள் உலக அமைதியை மட்டுமே தனது செயல்பாடாகக் கொள்ள வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுதான்.. அதிலிருந்து சற்றே விலகி இருந்தாலும், விலகி இருப்பதுபோன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் அது அமைதியின்மைக்கே வலிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் டொனால்டு ட்ரம்பின் அணுகுமுறை மற்ற நாடுகளுக்கு தேவையில்லாத சிக்கல்களை கொண்டு வரும் என்றே பலரும் விமர்சிக்கிறார்கள்.