ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது விடாப்பிடியாக இருக்கும் ட்ரம்ப்: ஏன்?

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது விடாப்பிடியாக இருக்கும் ட்ரம்ப்: ஏன்?
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மீது விடாப்பிடியாக இருக்கும் ட்ரம்ப்: ஏன்?

கொரோனா சிகிச்சைக்கு எந்த மருந்தைப் பயன்படுத்துவது என்பது விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், இது தொடர்பாக மருத்துவர்களின் எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏன் அலட்சியம் செய்கிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தை இந்தியாவிடம் இருந்து கேட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் என்று உறுதி செய்யப்படவில்லை. இதயநோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் தனது ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பின்போதும், ஹைட்ராக்சிகுளோரோகுயினை கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

அண்மையில் பிரதமர் நரேந்திரமோடியிடம் பேசும்போதும், இந்த மருந்துக்கு இந்தியா விதித்திருக்கும் தடையை அகற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பின்னர் இதுகுறித்துப் பேசும்போது, இந்தியா தடையை நீக்காவிட்டால், எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்திருந்தார். அமெரிக்காவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான FDA ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த முதலில் அனுமதியளித்திருந்தது.

ஆயினும் அந்நாட்டு மருத்துவர்கள் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயினை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்த மருந்தின் நம்பகத்தன்மை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதைப் பயன்படுத்துவதால் என்ன இழப்பு வந்துவிடப்போகிறது என்று ட்ரம்ப் பல முறை அழுத்தந்திருத்தமாகக் கூறிவிட்டார் .

ஹைட்ராக்சிகுளோரோகுயினைப் பயன்படுத்தக் கூறுவதால் மருந்து நிறுவனங்களுக்குத்தான் அதிக லாபம் கிடைக்கப் போவதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஹைட்ராக்சிகுளோரோகுயின் அடங்கிய பிளாக்கெனில் என்ற மருந்ததைத் தயாரிக்கும் சனோஃபி என்ற பிரான்ஸ் நாட்டு மருந்து நிறுவனத்தில் ட்ரம்புக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் நிதிசார்ந்த தொடர்பு இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

ஏற்கெனவே சுமார் 3 கோடி அளவுக்கு இந்த மருந்தை அமெரிக்கா சேமித்து வைத்திருப்பதாகவும் அந்த இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக மருந்து தேவை எனவும் கேட்டிருக்கிறது. பக்கவிளைவுகள் உள்ள மருந்துக்கு இந்த அளவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவாகப் பேசிவருவது, அவருக்கு எதிரான விவாதத்தை உருவாக்கியிருப்பதுடன், அமெரிக்காவை தவறாக வழிநடத்துவதாகவும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com