”சும்மா இருக்க வெச்சு ரூ.1 கோடி சம்பளம் தராங்க; நியாயமா இது?” -கோர்ட்டை நாடிய ஊழியர்: ஏன்?

”சும்மா இருக்க வெச்சு ரூ.1 கோடி சம்பளம் தராங்க; நியாயமா இது?” -கோர்ட்டை நாடிய ஊழியர்: ஏன்?
”சும்மா இருக்க வெச்சு ரூ.1 கோடி சம்பளம் தராங்க; நியாயமா இது?” -கோர்ட்டை நாடிய ஊழியர்: ஏன்?

நல்ல ஆரோக்கியமான சூழலில் வேலை பார்ப்பது மனதளவிலும், உணர்வளவிலும் நல்ல முன்னேற்றத்தையும், நிம்மதியையுமே கொடுக்கும். ஆனால் அயர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் பணியாற்றும் நிறுவனத்தில் தன்னை வேலையே செய்யவிடாமல் சும்மா வைத்திருப்பதாகச் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது.

டப்ளினைச் சேர்ந்த டெர்மோட் அலஸ்டைர் மில்ஸ் என்பவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் ஃபைனான்ஸ் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சம்பளமாக ஓராண்டுக்கு ஒரு கோடியே மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் அவரது பணியிடத்தில் பெரும்பாலும் நியூஸ் பேப்பர் படிப்பது, சாண்ட்விட்ச் சாப்பிடுவது, வாக்கிங் செல்வது போன்றவற்றை மட்டுமே செய்கிறாராம்.

இது குறித்து டெய்லி மெயில் தளத்திடம் பேசியுள்ள மில்ஸ், “ஆஃபிஸில் என்னுடைய அறைக்குச் சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்து மெயில் பார்ப்பில். அந்த மெயிலில் வேலை நிமித்தமான எந்த தகவலும் இருக்காது. உடன் பணியாற்றுவோர் பற்றிய எந்த தகவலும், தொடர்பு மெயிலில் வராது.” என்றிருக்கிறார்.

வாரத்தில் 5 வேலை நாட்களில் 3 நாள் மட்டுமே மில்ஸ் ஆஃபிஸுக்கு போவாராம். அந்த நாட்களிலும் வேலை எதுவும் இல்லாமல் போவதால் சீக்கிரமாகவே வீட்டுக்கு புறப்பட்டுவிடுவாராம். மீதி நாட்களில் வீட்டில் இருந்தே பணியாற்றுவாராம். இப்படியாக எந்த வேலையையும் பார்க்க விடாமல் சும்மா அலுவலகத்துக்கு சென்று 9 ஆண்டுகளாக ஊதியமும் பெற்று வந்திருக்கிறார்.

இப்படியெல்லாம் நடக்க என்ன காரணம் என கேட்ட போது, கடந்த 2014ம் ஆண்டு தனது அலுவலகத்தில் நடந்த நிதி மோசடியை மில்ஸ் அம்பலப்படுத்தியதால் அவருக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததோடு, அவருக்கு எந்த வேலையும் கொடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள். இதனால் தன்னுடைய திறமைகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் மட்டுப்படுத்தப்படுவதாகவும், எந்த பதவி உயர்வும் கொடுக்காமல் வேலையில் வைத்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி மில்ஸ் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அதன்படி அயர்லாந்தின் Workplace Relations Commission என்ற ஆணையத்தை அணுகிய மில்ஸ், “என் திறமையை வெளிப்படுத்த விடாமல் என்னை தடுக்கிறார்கள். இது மன உளைச்சலையே ஏற்படுத்துகிறது.” எனக் கூறி வழக்கு போட்டிருக்கிறார். இதனையடுத்து “அவர் வேலை செய்யாமல் இருப்பதற்காக மில்ஸை நாங்கள் தண்டிக்கவேயில்லை” என நிறுவனம் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைத்திருக்கிறது ஆணையம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com