’இனி தாக்குதல் நடத்தினா வேற ரூட்டுதான்..’ - அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்த ஈரான்!
அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், தற்போது ஆணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டியுள்ளோம். அதை முழு திறன் கொண்ட 90 சதவீதமாக செறிவூட்டுவோம் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எனினும், இவ்விவகாரத்தில் சுமுகம் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திலேயே காணப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், தற்போது ஆணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டியுள்ளோம். அதை முழு திறன் கொண்ட 90 சதவீதமாக செறிவூட்டுவோம் என்று ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி, “மற்றொரு தாக்குதல் நடைபெறும் பட்சத்தில், ஈரானின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக 90 சதவீத செறிவூட்டல் அமையக்கூடும்” என அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது தீவிரமாக தாக்குதல் நடத்துவது தொடர்பாக பரிசீலித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைத்து, தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ஈரானிடம் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை தனது இறையாண்மை உரிமை எனக் கருதும் ஈரான், இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே, இருதரப்பிலும் இவ்விவகாரம் இழுத்தடித்தப்படியே நீண்டுகொண்டிருக்கிறது. முன்னதாக, அதாவது 12 நாள் போரின்போது ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதாக் அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு அழிக்கப்படாவிட்டால் அல்லது நாட்டிலிருந்து வெளியேற்றப்படாவிட்டால், தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் தொடர்ந்து இயங்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்தது. இந்த நிலையில்தான் ஈரான் தற்போது மிரட்டியுள்ளது.

