நடுவானில் திக்திக் நிமிடங்கள்.. இடிந்து விழுந்த விமானக் கூரை.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
செய்தியாளர் - M. மீரா
ஈரானில் மஷாத் நகரில் இருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட Sepehran Airlines நிறுவனத்தின் Boeing 737 விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. செப்டம்பர் 15ஆம் தேதி மாலை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தின் லேண்டிங் கியரில் இருந்த ஒரு டயரின் வெளிப்புற பகுதி புறப்படும் நேரத்தில் பிரிந்துள்ளது. இதையடுத்து விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டதுடன், விமானிகள் எஞ்சின் தொடர்பான அவசரநிலையை அறிவித்து மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்குத் திரும்ப முடிவு செய்தனர்.
விமானம் திரும்பிச் சென்றபோது பயணிகள் இருந்த கேபினிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்புறத்தில் இருந்த கேபின் பேனல்கள் மற்றும் ஓவர்ஹெட் பின்கள் தளர்ந்து கீழே விழுந்தன. சில இடங்களில் விமானத்தின் உள்புற கட்டமைப்பும் வெளிப்பட்டது. பயணிகளின் கைப்பைகள் மற்றும் பொருட்களும் மேல்புறப் பெட்டிகளில் இருந்து கீழே விழுந்தன.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், விமானம் தொடர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தபோது பயணிகள் அச்சத்தில் அலறுவதும், சிலர் பிரார்த்தனை செய்வதும் பதிவாகியுள்ளது. கேபின் கூரையின் பகுதிகள் பயணிகள் மீது விழும் காட்சிகளும் அந்த வீடியோக்களில் காணப்படுகின்றன. இந்நிலையில், விமானிகள் நிலைமையைச் சமாளித்து விமானத்தைப் பாதுகாப்பாக மீண்டும் மஷாத் விமான நிலையத்தில் தரையிறக்கினர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் கெர்மான்ஷாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்கான முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, விமானத்தின் கேபின் இவ்வளவு மோசமாக சேதமடைந்த காட்சிகள் வெளியாகியிருப்பது விமானப் பாதுகாப்பு தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

