\
iran war
iran war reuters

ஈரான் போர் | உலகையே உலுக்கிய ரகசிய கூட்டணி.. அமெரிக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உக்ரைன் போரில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் சூழலில், மத்திய கிழக்கில் ஈரானுக்கு ரஷ்யா வழங்குவதாகக் கூறப்படும் ஆதரவு அமெரிக்கா–ரஷ்யா உறவுகளிலும் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
Published on

செய்தியாளர் - M. மீரா

ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் , வளைகுடாவில் அமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை ரஷ்யா ஈரானுக்கு வழங்கியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் அதிநவீன செயற்கைகோள்கள் மூலம் அமெரிக்க வீரர்கள், விமானங்கள் மற்றும் ராணுவத் தளங்கள் குறித்த தகவல்கள் ஈரானுக்கு சென்றதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல்களை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

iran war
iran war AI

இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. அமெரிக்கா குறித்தான உளவுத் தகவல்களை ஈரானுடன் பகிரவில்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் செயற்கைகோள் கட்டமைப்பு அமெரிக்கா ராணுவத்தை மற்றும் வீரர்களின் நகர்வுகளை கண்காணிக்கும் திறன் கொண்டவையாக இருக்கிறது என CNN வெளியிட்ட தகவல் கூறுகிறது.

iran war
அமெரிக்காவின் அடிமடியில் கைவைத்த ஹவுதி.. ஈரான் போருடன் இணையும் ஏமன் போர்.. அதிர்ச்சியில் சவுதி!

ஈரானிடம் சொந்தமாக செயற்கைக்கோள் திறன்கள் இருந்தாலும், போரின்போது அதன் உளவு மற்றும் ராணுவத் திறன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக CNN குறிப்பிட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் விண்வெளி உளவுத் திறன் ஈரானுக்கு முக்கியமானதாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கியமாகப் பேசப்படும் சம்பவம், சவூதி அரேபியாவில் உள்ள Prince Sultan Air Base மீது ஈரான் நடத்திய தாக்குதல் ஆகும்.

மார்ச் மாதத்தில் நடந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததுடன், அமெரிக்க விமானப்படையின் எரிபொருள் நிரப்பும் விமானங்களும் சேதமடைந்தன. Prince Sultan Air Base சம்பவத்தைச் சுற்றி வெளியாகியுள்ள தகவல்களில், தாக்குதலுக்கு முன்பாக அந்தப் பகுதியில் பல ரஷ்ய செயற்கைக்கோள்கள் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

iran war
iran war reuters

அவற்றில் சில செயற்கைக்கோள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்கக்கூடியவை என்றும், மேலும் சில செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்புகளை கண்காணிப்பது மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை அடையாளம் காண்பது போன்ற பணிகளுக்கு பயன்படக்கூடியவை என்றும் கூறப்படுகிறது.

இதனால், அமெரிக்க ராணுவ தளத்தின் அமைப்பு, விமானங்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரானுக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் இடையிலான ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஏற்கெனவே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவத் தொழில்நுட்பங்களில் பல்வேறு வகையில் ஒத்துழைத்து வந்துள்ளதாக CNN குறிப்பிட்டுள்ளது.

iran war
iran warreuters

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரஷ்யா நேரடியாக உளவுத் தகவல் வழங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், உக்ரைன் போரில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வரும் சூழலில், மத்திய கிழக்கில் ஈரானுக்கு ரஷ்யா வழங்குவதாகக் கூறப்படும் ஆதரவு அமெரிக்கா–ரஷ்யா உறவுகளிலும் புதிய பதற்றத்தை உருவாக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

iran war
சவுதி–ஹவுதி மோதலில் வெடித்த புதிய சர்ச்சை.. மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com