சீனா டூ ஜெர்மனி.. 5,000 போலி நிறுவனங்கள்.. 2 பில்லியன் டாலர் ஆயுதங்கள்.. அமெரிக்காவை ஏமாற்றிய ஈரான்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மிகப்பெரிய தாக்குதல்களைத் தொடங்கின. அது, இன்றுவரை தொடர்கின்ற நிலையில், அதனால் மத்திய கிழக்கின் பாதுகாப்பு, உலகப் பொருளாதாரம், கச்சா எண்ணெய் வர்த்தகம், சர்வதேச அரசியல் ஆகியவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விவகாரமாக மாறியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பதிலடி தாக்குதல்களை நடத்திவருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல் மற்றும் பதற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
இந்த நிலையில்தான், அமெரிக்காவின் கடற்படைத் தடைகள் மற்றும் மேற்கத்திய பொருளாதாரத் தடைகளையும் மீறி, ஈரான் தனது பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் முகமைகள் மூலம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இராணுவத் தளவாடங்களை ரகசியமாக இறக்குமதி செய்துள்ளதை சர்வதேச புலனாய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி 2025 முதல் குறைந்தது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தளவாடங்கள், வெடிபொருட்கள் மற்றும் கனரக லாரிகளை இறக்குமதி செய்வதற்காக, ’பாதுகாப்பு அமைச்சகம்’ (MOD) என்ற பெயரில் இயங்கும் 5,000-க்கும் மேற்பட்ட இராணுவ முகமைகளைக் கொண்ட ஒரு ரகசிய வலையமைப்பை ஈரான் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிநவீன அமைப்பு, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடனும், ஈரானின் மேட்டுக்குடியினரால் கட்டுப்படுத்தப்படும் 'போன்யாட்ஸ்' எனப்படும் வணிகக் குழுமங்களுடனும் தொடர்புடையது என்றும், அதன் நிதித் தடயங்களை 2016ஆம் ஆண்டு வரையிலான சரக்கு இறக்குதல் ரசீதுகள் மற்றும் பிற கப்பல் போக்குவரத்துத் தரவுகளில் கண்டறிய முடியும் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட இறக்குமதிப் பதிவுகளில் சுமார் 97% பரிவர்த்தனைகள் வழக்கமான சர்வதேச வங்கிப் பணப் பரிமாற்றங்கள் இன்றி முடிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் மேற்கத்தியத் தடைகள் இருந்தபோதிலும் இது தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராய்ட்டர்ஸ் நடத்திய ஒரு புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சட்டவிரோத எண்ணெய் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைப் பயன்படுத்தும் பினாமி நபர்கள் மற்றும் வெளிநாட்டு போலி நிறுவனங்களின் மூலம் ஈரான் இதைப் பெற்றதாகவும், இந்த அமைப்புகள் மூலம் சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து ராக்கெட் உந்து எரிபொருள்கள், உதிரிபாகங்கள் மற்றும் கனரக ஏவுகணை செலுத்திகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஏவுகணை ஏவுதளங்களாக மாற்றியமைக்கக்கூடிய 435-க்கும் மேற்பட்ட கனரக இவெகோ டிரக்குகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகளைப் பொருத்தக்கூடிய ஆயிரக்கணக்கான டொயோட்டா ஹிலக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன என விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதில், ஒரே ஒரு முகமை மட்டும் 2023 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் ராக்கெட் மூலப்பொருட்கள் மற்றும் வாகனங்களுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை செலவழித்து ஈரானின் முன்னணி இறக்குமதியாளர்களில் ஒன்றாக உருவெடுத்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தங்களுக்குத் தெரியாது எனவும் எங்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சிகளை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் எனவும் சீனா தெரிவித்துள்ள நிலையில், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல்களின்போது ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்திய பிறகும், ஈரான் தனது ஆயுதக் கிடங்குகளை எவ்வாறு தொடர்ந்து நிரப்பிக் கொள்கிறது என்ற புதிருக்கு மட்டும் தற்போது விடை கிடைத்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

